By Village Missionary Movement
Thursday, 02-May-2024இன்றைய தியானம்(Tamil) 02.05.2024
திருப்புமுனை
"என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்" - மத்தேயு 11:30
நான் ஒரு பாரம்பரிய கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து பக்தியாய் வளர்க்கப்பட்டேன். ஆனாலும் என்னுடைய பதினெட்டு வயது வரை இயேசுவின் அன்பை ருசித்ததில்லை. தேவனுக்கு பிரியமில்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். என்னுடைய தாய், தகப்பன் இருவரும் பிறவியிலேயே வாய் பேச, காது கேட்க இயலாதவர்கள். ஆகவே அவர்களை வெறுத்தேன், துன்புறுத்தினேன். ஒரு நாள் தற்செயலாய் ஒரு வாலிபர் கூட்டத்திலே கலந்து கொண்டேன், ஆண்டவர் என்னோடு பேசினார். "இரண்டுநாள் வாலிபர் கூட்டமும் என் ஒருவனுக்காகத்தான்" என்று பிரத்தியட்சமாய் ஆண்டவர் என்னோடு பேசினார். என்னுடைய வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புக் கொடுத்தேன்.
என்னுடைய பதினெட்டாம் வயதில் இயேசுகிறிஸ்து என் பாவங்ளையெல்லாம் மன்னித்து என்னை அவருடைய பிள்ளையாக ஏற்றுக் கொண்டார். ஆண்டவர் என் வாழ்க்கையில் வந்ததை நினைத்து என் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆண்டவர் மேல் உள்ள அன்பினாலே சிறுசிறு ஊழியங்களைச் செய்து வந்தேன். அந்த நாட்களில் தான் எங்களுடைய ஊருக்கு கிராம மிஷனெரி இயக்கத்தைச் சேர்ந்த ஜேக்கப் அண்ணன் ஊழியத்திற்கு வந்தார்கள். அவர்களோடு இணைந்து கிராம ஊழியத்திற்கு செல்வேன். 2012 ஜனவரி மாதம் பரமக்குடியில் மூன்றுநாள் கூட்டம் கிராம மிஷனெரி இயக்கத்தின் சார்பாக ஆயத்தப்படுத்தியிருந்தார்கள். அந்தக் கூடுகையில் கலந்து கொள்ள சென்றேன். அதில் சகோ. டேவிட் கணேசன் அவர்கள் ஆண்டவருடைய வார்த்தையை பிரசங்கித்தார்கள். கூட்டம் முடிந்தவுடன் அவருடைய அறையிலே அவரைப் பார்க்கச் சென்றேன். கடைசியாக அவர் ஒரு வார்த்தை சொன்னார்கள். இயேசப்பா அழுகிறார் நீ ஏன் எங்களோடு இணைந்து ஊழியம் செய்யக் கூடாது என்று! அதைக் கேட்டவுடன் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் கண்ணீரைத் துடைத்த இயேசு அழுகிறார் அவருக்காக இந்த ஊழியத்திலே இணைந்து ஊழியம் செய்வோம் என்று தீர்மானித்தேன். ஒருபுறம் வாய்பேச முடியாத காதுகேட்காத பெற்றோர், மற்றும் திருமணத்திற்காக காத்திருக்கிற என் சகோதரி, மற்றொருபுறம் ஆத்துமாக்களுக்காக அழுகிற இயேசு. ஆனாலும் என்னுடைய முழுக்குடும்பத்தின் சம்மதத்துடன் ஊழியத்தில் இணைய தேவன் உதவி செய்தார். இன்று என் அப்பா,அம்மா இருவரும் பதினெட்டு வருடங்களுக்கு மேலாக காதுகேளாத, வாய்பேச முடியாதவர்கள் மத்தியில் ஊழியம் செய்கிறார்கள். என்னுடைய அக்காவின் திருமணத்தை ஆண்டவரே நடத்திக் கொடுத்தார். நானும் குடும்பமாக ஆண்டவருடைய ஊழியத்தை செய்ய தேவன் கிருபை கொடுத்தார்.
இதை வாசிக்கின்ற அருமையான வாலிப சகோதர சகோதரிகளே, நீங்கள் எவ்வளவு கடினமான சூழ்நிலையில் இருந்தாலும் உங்கள் வாழ்க்கையை அவருடைய ஊழியத்திற்கென்று அர்ப்பணித்துப் பாருங்கள். உங்களையும் இயேசு பயன்படுத்துவார். உங்களுடைய காரியங்களையும் அவரே பார்த்துக் கொள்வார். இயேசப்பா அழுகிறார் அவர் பணி செய்து அவர் கண்ணீரை துடைக்க நீங்களும் உங்களால் இயன்றதைச் செய்யுங்களேன். ஒரு விதையாய் அநேகருக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ தேவனுக்கென்று உங்களை அர்ப்பணியுங்கள். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
- Bro. ஆல்வின் ஜேக்கப்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் VBS ஊழியங்கள் மூலம் 5000 கிராமங்கள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864