By Village Missionary Movement
Wednesday, 01-May-2024இன்றைய தியானம்(Tamil) 01.05.2024
உபவாசமும் - புறப்பட்டு போகுதலும்
“இவைகளையும் செய்ய வேண்டும், அவைகளையும் விடாதிருக்க வேண்டும்" - மத்தேயு 23:23
இயேசுகிறிஸ்து வாழ்ந்த காலத்தில் வேதபாரகர்கள் வேதத்தின் சில சத்தியங்களை தீவிரமாக கடைபிடித்தனர்; சில சத்தியங்களை கவனிக்காமல் விட்டு விட்டனர். தசமபாகம் என்று வரும்போது பணத்தில் மட்டுமல்ல, சீரகத்தில் கூட தசமபாகம் செலுத்தினர். ஆனால் வேதத்தின் முக்கியமானவைகளாகிய நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவைகளை மறந்து விட்டனர். இதினிமித்தம் ஆண்டவர் அவர்களை "உங்களுக்கு ஐயோ" என்று கடிந்து கொண்டார்.
காணிக்கை முக்கியமா அல்லது இரக்கம் முக்கியமா என்று வரும்போது, "இவைகளையும் செய்ய வேண்டும், அவைகளையும் விடாதிருக்க வேண்டும்" என்று நம்முடைய ஆண்டவர் கூறினார். ஆம், வேதத்தின் அனைத்து சத்தியங்களையும் சமநிலைப்படுத்தி அப்பியாசிக்க வேண்டும்.
உலகெங்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும் என்பது நமது ஆண்டவரின் கட்டளை. மத்தேயு 28:19 ல் கவனிக்க வேண்டிய முக்கியமான வார்த்தை "நீங்கள் புறப்பட்டுப் போய்" . . . ஆம், சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களுக்கு சீஷர்கள் புறப்பட்டுப் போய் சுவிசேஷம் அறிவிக்க வேண்டும். இன்று அநேக நேரங்களில் தேசத்தின் ஜனங்களின் இரட்சிப்பிற்காக உபவாச ஜெபங்கள் நடத்தப்படுகிறது. அது மிக நல்லதே, ஆனால் ஜெபிப்பதோடு நின்று விடுகிறோம். ஜனங்களின் இரட்சிப்பிற்காக செயல்படுகிறோமா என்பது யோசிக்க கூடியதாயிருக்கிறது.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பூமியிலிருந்த நாட்களில் ஜெபம் அவரது வாழ்வில் பிரதானமான ஒன்றாயிருந்தது. அவருடைய ஊழிய ஆரம்பத்தில் நாற்பது நாட்கள் உபவாசம் பண்ணியதை சுவிசேஷங்களில் வாசிக்கலாம். ஆனால் நம் ஆண்டவர் அதோடு நின்றுவிடாமல், "சகல பட்டணங்களையும், கிராமங்களையும் சுற்றி நடந்து . . சுவிசேஷத்தைப் பிரசங்கித்து" (மத்தேயு 9:35) என்று வாசிக்கின்றோம். இயேசுகிறிஸ்து நமக்கு வைத்துப் போன மாதிரி, "உபவாசிக்க வேண்டும், அதோடு புறப்பட்டு செல்ல வேண்டும்" என்பதே!
ஐரோப்பிய மிஷனெரிகள் தங்கள் தேசங்களில் உபவாசித்து ஜெபித்து அத்தோடு நின்றிருந்தால், நீங்களும் நானும் இரட்சிக்கப்பட்டிருக்க முடியாது. அவர்கள் ஆபத்தான கடல் பிரயாணங்களையும், உள்நாட்டில் மாட்டுவண்டிகளிலும் புறப்பட்டு செயல்பட்டதினால் தான் நாம் சுவிசேஷத்தை அறிந்தோம். நாமும் அவர்களை போல உபவாசித்து ஜெபிப்போம்; புறப்பட்டுச் சென்று எங்கும் சுவிசேஷம் அறிவிப்போம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
- J. சந்தோஷ்
ஜெபக்குறிப்பு;
இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து நடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864