By Village Missionary Movement
Saturday, 20-Apr-2024இன்றைய தியானம்(Tamil) 20.04.2024
செத்த ஈ
"செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப் போகப்பண்ணும்;…" - பிரசங்கி 10:1
ஒரு வீட்டின் தோட்டத்திலுள்ள ஒரு மரத்தில் காகம் கூடு கட்டி வாழ்ந்தது. அதே தோட்டத்தில் வாழ்ந்த நாயும், காகமும் நண்பர்களானார்கள். ஒரு நாள் சோகமாக இருந்த காகத்தைப் பார்த்து நாய், ஏன் இன்று சோகமாய் இருக்கிறாய் என்றது. காகம் அதெல்லாம் ஒன்றுமில்லை என்றது. நாய் விடவில்லை. உடனே காகம் சொன்னது. கிளி, புறா இவற்றை இந்த வீட்டார் கொஞ்சிகொஞ்சி வளர்க்கிறார்களே என நானும் அவர்கள் ஜன்னல் அருகே சென்றேன். என்னை விரட்டி விட்டார்கள். என்னை ஏன் பிடிக்கவில்லை, என்னிடம் எவ்வளவு நற்குணங்கள் உண்டு என்றது. நாய், நற்குணமா? உன்னிடமா! எங்கே சொல்லு என்றதும் அதிகாலையில் எழுவோம், தூய்மையாக இருப்போம். கூடி வாழ்வோம் என்றது காகம். நாய் இதெல்லாம் இருந்தாலும் உன்னிடம் திருட்டு பழக்கம் உண்டே அதுவும் விழித்திருக்கும் போதே கையிலுள்ளதையே பறித்துச் சென்று விடுவாயே என்றது. ஆம், இத்தனை நல்ல குணம் என்னிடமிருந்தும் திருட்டுக் குணத்தால் என்னிடம் இருக்கிற நல்ல குணம் அனைத்தும் வீணாகிவிட்டதே என எண்ணியது.
இதே போல ஞானத்திலும், கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் கெட்டு நாறிப்போகப் பண்ணும் என வேதம் கூறுகிறது. நமக்குள் எழும் தவறான சிறு சிறு எண்ணங்கள், சிந்தைகள் நம்மை வீழ்த்துகிறது. உசியா ராஜா பதினாறு வயதில் ராஜாவானதும் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானபடி செய்கிறார். தன் படை பலத்தை பெருக்குகிறார். மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களை சம்பாதிக்கிறார். பெரிய காரியங்களைச் செய்தார் என வேதம் சொல்கிறது. ஆனால் தனக்கு கேடுண்டாகும் மட்டும் அவனுடைய மனம் மேட்டிமையாகி, என வேதம் சொல்கிறது. "மேட்டிமை" செத்த ஈயாய் அவரது வாசனையுள்ள தைலம் போலிருந்த வாழ்வில் விழுந்து உசியா ராஜாவின் எல்லா நற்குணங்களையும் அழித்துப் போட்டது. மோசேயின் சிறு கீழ்ப்படியாமையால் கானானை சுதந்தரிக்க முடியவில்லை. சாலமோன் பெரிய ஞானியாயிருந்தும் தேவ கட்டளையை மீறி அந்நிய ஸ்திரீயை விவாகம் பண்ணின காரியம் ராஜ்ஜியத்தை இரண்டாக்கியது. எல்லா ஞானத்தையும் அவமாக்கியது. சிம்சோன் தேவகட்டளையை மீறி செத்த சிங்கத்தின் உடம்பிலிருந்த தேனை சாப்பிட்டது பலசாலியான அவரை அடிமையாக்கியது.
பிரியமானவர்களே, நீங்கள் நன்கு ஆசீர்வதிக்கப்பட்டு, செழிப்பாய் இருக்கிறீர்களா? பெருமை, மேட்டிமை, அகந்தை நம் சிந்தையிலும் வராதபடி பார்த்துக் கொள்வோம். அதற்கு ஒவ்வொரு நாளும் நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, எல்லாம் தேவனுடைய கிருபையே அல்லாமல் வேறொன்றும் அல்ல என நம்முடைய எல்லாக் காரியங்களையும் ஒப்புக் கொடுக்க வேண்டும். தேவகிருபை, தயவு இல்லாமல் ஒன்றுமில்லை என்பதை நம் மனதில் இருத்துவோம். செத்த ஈ போன்ற காரியங்கள் நம் வாழ்வில் விழாமல் காப்போம்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
மீடியாவில் பணிபுரியும் நபர்களுக்காக மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864