By Village Missionary Movement
Friday, 19-Apr-2024இன்றைய தியானம்(Tamil) 19.04.2024
அந்நேரத்தில் . . .
"இனி அவர் உம்முடைய வாயை நகைப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்." - யோபு 8:22
ராஜு +2 முடித்து மேற்படிப்பு படிக்க முடியாமல் கட்டிடம் கட்டும் வேலைக்கு போய்க் கொண்டிருந்தான். எப்படியோ கஷ்டப்பட்டு படித்து போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வில் ஜெயித்து விட்டான். நேர் முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தான். நாளை ஹைதராபாத்தில் இருக்க வேண்டும். செல்வதற்கு பணம் இல்லை. என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் ஜெபித்துவிட்டு தென் கோடியில் உள்ள அவனது கிராமத்தில் இருந்தான். அவனுடைய அண்ணனும், அண்ணியும் வந்து விமானத்தில் நேர்முகத் தேர்வு நடக்கும் இடத்திற்கு கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். அங்குதான் காத்திருந்தது அவனுக்கு பெரிய ஆச்சரியம். நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த அதிகாரிகள் ஹிந்தியில் இண்டர்வியூ பண்ணிக் கொண்டிருந்தனர். ராஜுவுக்கோ கலக்கம். அவனது முறைவந்த போது கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்த அதிகாரிக்கு தொலைபேசி அழைப்பு வர, அந்நேரத்தில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரி இவனிடம் கேள்வி கேட்டார். செலக்ட் ஆகி வேலை கிடைத்தது. இன்றும் வேலை பார்த்து வருகிறான்.
இதே போலவே வேதத்திலும் எஸ்தர் புஸ்தகத்தில் வரும் சம்பவம் நம்மை ஆச்சரியப்படுத்தும். எஸ்தர் ராஜாத்தி ஆகிறார். மொர்தெகாயின் மேலிருந்த காழ்ப்புணர்ச்சியால் ஆமான் அவனுக்கு ஐம்பது முழத்தில் தூக்குமரமும் அவனைச் சார்ந்த யூத ஜனங்களைக் கொல்லவும் ராஜாவிடம் உத்தரவு வாங்கிக் கொண்டான். மொர்தெகாயை தூக்குமரத்தில் போட வேண்டும் என சொல்ல ராஜாவின் முற்றத்தில் வந்து நின்றான். ராஜாவும் ஆமானை உள்ளே அழைப்பித்தான். அந்நேரத்தில் ராஜா முதலில் பேசி விடுகிறார். ராஜா கனம் பண்ண விரும்புகிறவனுக்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டார். ஒரு வேளை ஆமான் முதலில் பேசியிருந்தால் மொர்தெகாய்க்கு தூக்குமரமும் யூத குலம் அழிந்தே போயிருக்கும். ஒரு நொடியில் காரியங்களை மாறுதலாக மாற்றுகிறவர் நம் தேவனல்லவா!
ஆம், எனக்கு பிரியமானவர்களே, இதனை வாசிக்கின்ற உங்களுடைய வாழ்வில் சூழ்நிலைகள் எல்லாம் உங்களுக்கு எதிராய் சாதகமற்று காணப்படலாம். நம்பிக்கைக்கு இடமுண்டோ? என்ற கேள்விகள் உங்களை வாட்டலாம். கலங்காதிருங்கள். நம் தேவனால் ஒரு நொடியில் உங்கள் காரியங்களை மாறுதலாக்கி, சந்தோஷத்தினாலும், மகிழ்ச்சியினாலும், உங்கள் உதடுகளை கெம்பீர சத்தத்தினாலும் நிரப்ப முடியும். ஒரு நொடி போதும் நம் ஆண்டவருக்கு உங்கள் வாழ்வை மாற்ற. ஜெபியுங்கள், காத்திருங்கள் உங்கள் வாழ்வை தேவன் ஆசீர்வாதமாய் மாற்றிடுவார்!! அல்லேலூயா!!!
- Sis. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
அலுவலகப் பணியாளர்களின் குடும்பங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864