By Village Missionary Movement
Monday, 08-Apr-2024இன்றைய தியானம்(Tamil) 08.04.2024
ஆண்டவரின் பதில்
"…பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்" - 1 சாமுவேல் 30:8
ஒருமுறை சுவிசேஷகர் பில்லிகிரஹாம் அவர்கள் செய்தியளிக்கும்படி லண்டனில் ஒரு நற்செய்தி கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அவர் இங்கே கூட்டம் நடத்த வரக்கூடாது என்று பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியது. அவரைப் பற்றிய அவதூறுக்களை பத்திரிக்கையில் எழுதினார்கள். இந்த சூழ்நிலையில் அவரும் அவருடைய மனைவியும் கப்பலில் வந்து லண்டன் துறைமுகத்தில் இறங்கியவுடன் பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, "எங்கள் லண்டனை மாற்ற வந்திருக்கிறீர்களா, உங்கள் அமெரிக்காவை மாற்றி விட்டீர்களா? என்றெல்லாம் ஆளாளுக்கு பலவிதமான கேள்விகளைக் கேட்டனர். சுவிசேஷத்தை அறிவிக்க வந்த ஒரு கிறிஸ்தவ நாடு இப்படியாக இருக்கிறதே என்றெண்ணி பில்லிகிரஹாம் மனமுடைந்து போனார். துறைமுகத்திலிருந்து தாங்கள் செல்ல வேண்டிய பட்டணத்திற்கு இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இயேசுவே காரியங்கள் இப்படியிருக்கிறதே எப்படி நான் இங்கு போய் ஊழியம் செய்யப் போகிறேன் என்று இருதயம் நொறுங்குண்டு தேவனுடைய முகத்தை நோக்கிப் பார்த்தார். "அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகிக்கும்" என்ற வேத வசனத்தின் மூலம் தேவன் அவரோடு பேசினார். உடனே பாரமெல்லாம் மாறி அவரது உள்ளம் இலகுவாகி விட்டது. இரயிலிலிருந்து அவர்கள் இறங்கியபோது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி நின்று அவர்களை ஆர்ப்பரித்து வரவேற்றார்கள். உனக்காக நான் எவ்வளவு மக்களை வைத்திருக்கிறேன் பார்த்தாயா? என்று அவரது உள்ளத்தில் தேவன் பேசினார். அதைக் கண்ட பில்லிகிரஹாம் கண்களில் கண்ணீர் வழிந்தது.
வேதத்திலே, அப். பவுலின் ஊழியப் பாதையானாலும் சரி, சீஷர்களின் ஊழியமானாலும் சரி அவர்கள் பல பிரச்சனைகள், பாடுகள், நெருக்கங்களின் மத்தியில் தான் ஊழியத்தை நிறைவேற்றி முடித்தனர். இயேசுவின் சீஷர்கள் வெவ்வேறு நாடுகளுக்கும் தனிநபராய் சென்று மொழி, மக்கள், கலாச்சாரம் எல்லாம் மாறுபட்டதாயிருந்தாலும் ஆத்துமாக்களின் மேலிருந்த அன்பினால் அனைத்தையும் சகித்து ஊழியம் செய்து யோவான் தவிர மற்ற அனைவருமே இரத்தசாட்சியாக மரித்தனர்.
பிரியமானவர்களே, நீங்களும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதினிமித்தமோ, அவரை மற்றவர்களுக்கு அறிவித்ததினிமித்தமோ உங்கள் குடும்பத்தாராலும், மற்றவர்களாலும் நிந்தையையும் அவமானத்தையும் அடைந்து வருகிறீர்களோ? கலங்காதிருங்கள். கிறிஸ்துவின் மேல் அன்பினால் சகலத்தையும் தாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகித்துக் கொள்ளும். அப்பொழுது தேவ அன்பு நம் இருதயத்திற்கு மருந்தாய் அமையும். யார் உங்கள் மேல் எரிச்சலானார்களோ அவர்களே உங்கள் பக்கம் வரும்படி தேவன் அவர்களை மாற்றுவார். தேவன் உங்களுக்கென்று வைத்திருக்கிற ஆத்துமாக்கள் உங்கள் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
- Bro. பரமசிவன்
ஜெபக்குறிப்பு:
நம்முடைய ஊழியர்களின் பிரயாணப் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864