By Village Missionary Movement
Tuesday, 02-Apr-2024இன்றைய தியானம்(Tamil) 02.04.2024
ஜெபம்
"…பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார்கள்" - அப். 12:5
ஒருமுறை ஊழியத்தில் சோர்வடைந்து ஜெபிக்காமல், வேதம் வாசிக்காமல், ஊழியத்திற்குச் செல்லாமல் இருந்தேன். அப்போது ஒரு சொப்பனம்: அதில் பிசாசுகளின் கூட்டம் ஒன்றைக் கண்டேன். அதின் நடுவில் இருந்த தலைமைப் பிசாசு, குட்டிப் பிசாசுகளைப் பார்த்து டேவிட் கணேசன் இன்று சோர்ந்து போயிருக்கிறான். அவனை இயேசுவிடமிருந்து பிரிக்க இது தான் தருணம் என்றது. உடனே கிளம்பிய குட்டிப் பிசாசுகள் சிறிது நேரத்தில் திரும்பி வந்து சொன்ன காரியம் என்னவென்றால், "அவன் அருகில் சென்றோம். அவனை நெருங்க முடியாத அளவிற்கு அவனைச் சுற்றி நெருப்பு எரிகிறது. ஏனென்றால் அவனுக்காக ஒரு அம்மா அழுது ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றது. ஆம், அவர்கள் தான் எங்களுக்கு இயேசுவைப் பற்றி சொல்லிய சின்னத்தாய் டீச்சர். அப்போது எனக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை அறிந்து கொண்டேன். அன்பரே அன்று தான் ஜெபத்திற்குரிய வல்லமையை உணர்ந்தேன். பிசாசு முழங்கால்களுக்கு நடுங்குகிறது. தேவன் தம்மோடு தம் பிள்ளை உறவாடுவதை விரும்புகிறார்.
இன்றைய வேதபகுதியிலும் கூட பேதுரு ஊழியம் செய்ததினிமித்தம் சிறைக்குச் செல்கிறார். அவர் சிறையிலிருப்பதைக் கேள்விப்பட்ட சபையார் பேதுருவுக்காக ஜெபிக்கின்றனர். தேவன் தம் வல்லமையோடு செயல்படுகிறார். சங்கிலிகளை அறுத்து பேதுருவைத் தட்டி எழுப்பி சிறைக் கதவுகளின் தாழ்ப்பாள்களை முறித்து தேவ தூதர்களைக் கொண்டு கதவுகளை திறக்க வைத்து வெளியே அழைத்து வருகிறார். அதேபோல் தான் நம் தேவன் நீங்கள் உங்கள் வீட்டின் அறைகளில் ஜெபிக்கின்ற ஜெபத்திற்கும் உடனே பலன் தருகிறார். அவர் தூரத்திற்கும் சமீபத்திற்குமான தேவன். இதை விசுவாசித்த நூற்றுக்கதிபதி தேவனால் பாராட்டப்பட்டார். இஸ்ரவேலருக்குள்ளும் இல்லாத விசுவாசம் என பாராட்டப்பட்டார். இன்றும் சுவிசேஷத்தினிமித்தம் கட்டுண்டவர்கள், துன்பப்படுகிறவர்கள் உண்டு. சுவிசேஷத்தினிமித்தம் குறைச்சலுள்ளவர்கள் உண்டு அவர்களுக்காக ஜெபியுங்கள்.
இதை வாசிக்கும் பிரியமானவர்களே, நீங்கள் உங்கள் வீட்டறையில் போடும் முழுங்கால் பாதாள சேனையை நடுங்க வைக்கிறது. பரலோக சேனையை செயல்பட வைக்கிறது. இந்த ஆண்டும் ஒரு லட்சம் சிறுபிள்ளைகளை, VBS, சிறுவர் முகாம்கள், பள்ளி ஊழியங்கள் மற்றும் கிராம ஊழியங்கள் மூலம் சந்திக்க வேண்டுமென்று திட்டமிட்டு ஊழியம் செய்து வருகிறோம். அவர்கள் பிசாசின் தந்திரத் திட்டங்களிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுபட வைராக்கியமாய் ஜெபிக்க ஜெப வீரர்கள் தேவை. ஏன் நீங்கள் ஜெபிக்கக்கூடாது. ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் ஜெபியுங்கள். உங்கள் நண்பர்களை உங்களோடு இணைத்து கால் மணி நேரமோ, அரைமணி நேரமோ ஜெபித்தால் போதும். எங்களோடு கரம் கோருங்கள் சிறுவர் மற்றும் வாலிபர்கள் மத்தியில் பெரிய எழுப்புதலைக் காண்போம்.
- K. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:
இயேசுவின் சந்ததி என்ற நிகழ்ச்சி மூலம் சந்திக்கப்படும் சிறுவர்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864