By Village Missionary Movement
Monday, 01-Apr-2024இன்றைய தியானம்(Tamil) 01.04.2024
புறப்பட்டுப் போவோம்
"பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது…” - யோவான் 9:4
இரவு ஜெபம் குறித்த நல்லதொரு விழிப்புணர்வு எல்லா சபைகளிடமும் காணப்படுகின்றது. எந்தவொரு திருச்சபையாக இருந்தாலும் ஞாயிறு ஆராதனையோடு நிறுத்தி விடாமல், உபவாச ஜெபம், இரவு ஜெபம் என சபையின் மாதாந்திர அட்டவணையில் இருப்பதை பார்க்க முடிகின்றது. இன்றைய தியானத்தில் வேதாகமத்தின் அடிப்படையில் இரவு ஜெபத்தைக் குறித்து தியானிக்கப் போகிறோம்.
நமது ஆண்டவராகிய இயேசு தமது ஊழிய காலங்களில் அநேக இரவு ஜெபங்களில் தொடர்ந்து ஜெபித்து வந்தார்.(மாற்கு 1:35, லூக்கா 6:12, 21:37) இரவு ஜெபித்து விட்டு பகல் முழுவதும் ஓய்வு எடுப்பதை தமது வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதை வேதாகமத்தில் ஒரு இடத்திலும் வாசிக்க முடியாது. இரவு முழுவதும் ஜெபித்தார். பகலிலே சுற்றித் திரிந்து ஊழியம் செய்தார். இதுதான் இயேசுவானவர் நமக்குக் காண்பித்த முன்மாதிரியான ஊழிய முறையாகும். இரவு ஜெபத்தைக் குறித்து அதிக கரிசனையாக பேசும் இன்றைய திருச்சபை ஊழியர்களும், சுவிசேஷகர்களும் கூடவே பகலிலும் வெளியே சென்று ஊழியம் செய்ய வேண்டும் என போதிப்பதுதான் சரியானபடியாக இருக்கும். கிரியை செய்யாமல் ஜெபம் மட்டும் செய்வது சரியானது அல்ல. இன்றைய தலைப்பு வசனத்தில் நாம் வாசிக்கும் பொழுது அதை புரிந்து கொள்ள முடியும்.
இரவு ஜெபத்தைக் குறித்தும், உபவாச ஜெபத்தைக் குறித்தும் தீவிரமாக பேசிக் கொண்டும், போதித்துக் கொண்டும் இருக்கும் நமது திருச்சபையினருக்கு வெளியே புறப்பட்டு சென்று ஊழியம் செய்ய வேண்டும் என்பதை ஏன் மறந்து விட்டார்கள் என்பதை நம்மால் புரிய முடியவில்லை. இன்றைய செய்தியில் பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் கூறுவது என்னவென்றால் ஜெபிப்பதோடு நின்று விடாமல் வெளியே புறப்பட்டுச் சென்று ஊழியஞ் செய்யுங்கள் என்றும் பாரப்படுத்துகிறார். சார்லஸ் பின்னி, E.M. பவுண்ட்ஸ், ஜான் ஹைடு போன்ற எண்ணற்ற தேவ ஊழியர்களுடைய சரித்திரத்தை திருப்பிப் பார்த்தால் அவர்களும் இரவெல்லாம் ஜெபித்தார்கள். பகலெல்லாம் அலைந்து திரிந்து ஊழியம் செய்தார்கள் என அவர்களைக் குறித்து எழுதி இருக்கிறதை வாசிக்க முடியும். நமது தேசத்தில் ஊழியஞ் செய்த சாதுசுந்தர்சிங் இரவெல்லாம் ஜெபிப்பார். பகலில் இமயமலை பகுதிகளில் சுற்றித்திரிந்து ஊழியம் செய்து அநேக ஆத்துமாக்களை இயேசுவண்டை வழி நடத்தினார் என அவரைக் குறித்து வாசிக்க முடியும். ஆகவே கிறிஸ்துவில் பிரியமானவர்களே, இரவு ஜெபத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே போல் வெளியே புறப்பட்டுச் சென்று ஆத்துமாக்களை சந்திப்பதிலும் நாம் முக்கியத்துவம் கொடுக்கும்படி ஆண்டவர் நம்மை வழி நடத்துவாராக.
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864