By Village Missionary Movement
Thursday, 28-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 28.03.2024
இயேசுவின் பாடுகள்
"அவர் நெருக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை;…" - ஏசாயா 53:7
இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு மீட்பராக அனுப்பப்படுவதற்கு முன்னரே அவரது பிறப்பு, ஊழியம், அவர் படப்போகிற பாடுகள் எல்லாமே தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது. விசேஷமாக அவரது இறுதி நாட்களில் நடக்கப் போகும் நிகழ்வுகள், சிலுவைப் பாடுகள், மரணமும் அநேக தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
இயேசு யூதாஸ்காரியோத்தினால் 30 வெள்ளிகாசுக்காக காட்டிக் கொடுக்கப்பட்டு பிரதான ஆசாரியரிடம் அழைத்து செல்லப்படுகிறார். அங்கு அவர்மேல் பொய் சாட்சிகள் எழும்பி குற்றம் சாட்டிய போது "இயேசுவோ பேசாமலிருந்தார்". (மத். 26:63) மரணத்திற்கு பாத்திரன் என தீர்த்த போது, அவருடைய முகத்தில் துப்பி அவரை குட்டினார்கள், சிலர் அவரை கன்னத்தில் அறைந்து அவரை பரியாசம் பண்ணினார்கள்.
இயேசுவை தேசாதிபதியாகிய பிலாத்துவிடம் அனுப்பிய போது பிலாத்து அவரை விடுவிக்க விரும்பி, பண்டிகை நாட்களில் எவனை நான் உங்களுக்கு விடுவிக்க வேண்டும். பரபாசையா, இயேசுகிறிஸ்துவையா என கேட்டதற்கு ஜனங்கள் பரபாசை விடுதலை செய்யவும், இயேசுவை சிலுவையில் அறையவும் வேண்டும் என கூச்சலிட்டார்கள். தேசாதிபதியின் போர்ச்சேவகர்கள் இயேசுவின் வஸ்திரங்களை கழற்றி, சிவப்பான அங்கியை உடுத்தி முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து அவருக்கு முன்பாக பணிந்து "யூதருடைய ராஜாவே வாழ்க" என அவரைப் பரியாசம் பண்ணி, அவர் மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து அவருடைய சிரசில் அடித்தார்கள்.
இயேசு ஏரோதிடம் அனுப்பப்பட்டார், ஏரோது இயேசுவிடம் கேட்ட கேள்விகளுக்கு இயேசு மறுமொழியாக ஒன்றும் பேசவில்லை. (லூக்.22:9) வாரினால் அடித்து மரணத்துக்கு ஒப்புக் கொடுத்தான். இரண்டு குற்றவாளிகளுடன் இயேசுவும் சிலுவையில் அறையப்பட்டார். இரண்டு கரங்களிலும், கால்களிலும் ஆணிகள் எனக் கொடூரமாய் கொல்லப்பட்டார். அவர் மரித்து விட்டாரா என்று பார்க்க ஈட்டியால் குத்தப்பட்டார்.
இதனை வாசிக்கும் அன்பு சகோதர, சகோதரிகளே! இத்தனை பாடுகளையும் ஏன் சகித்தார்? யாருக்காக சகித்தார்? பரியாசம், நிந்தை, அவமானம், முள்முடி, சிலுவைப்பாடுகள் இவையெல்லாம் ஏன் அமைதியாய் சகித்தார். நமக்காகவே! நம்மை பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் விடுவிக்கவே! அவர் சிந்திய ரத்தத்தின் வல்லமையை அறிந்து அவரை இரட்சகராக, ஆண்டவராக ஏற்றுக் கொண்டால் நம்முடைய பாவங்கள் கழுவப்பட்டு நித்திய ஜீவனைப் பெறலாம். இந்த நித்திய ஜீவனைப் பெற தேவன் கிருபை செய்வாராக!
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் நடைபெறும் சுகமளிக்கும் ஆராதனையில் பங்குபெறும் நபர்கள் வியாதியிலிருந்து விடுபட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864