By Village Missionary Movement
Saturday, 23-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 23.03.2024
காலம் பொன்னானது
"நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்" - எபேசியர் 5:16
பலரும் காலத்தைக் குறித்து பலவிதமாய் கூறுவார்கள். காலம் பொன் போன்றது, காலத்தை வீணாக்காதீர். ஒவ்வொரு வினாடியும் விலையேறப் பெற்றது என்று பல கூற்றுகள் உண்டு. ஒரு நிமிடத்தின் மதிப்பை இரயிலை பிடிக்க முடியாமல் போனவர்களிம் கேட்டால் தெரியும் என்பார்கள். ஒரு மணி நேரத்தின் மதிப்பை அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரிடம் கேட்டால் தெரியும் என்பார்கள். ஒரு நாளின் மதிப்பை தினமும் கூலி வேலை செய்து சாப்பிடுபவரிடம் கேட்டால் தெரியும் என்பார்கள். ஒரு மாதத்தின் அருமையை உணர குறைப்பிரசவத்தில் குழந்தையை பெற்றறெடுத்த தாயிடம் கேட்டால் தெரியும் என்பார்கள். இப்படி நாட்களைக் குறித்து பல கருத்துகள் உலகில் இருப்பினும் வேதம் நமக்கு கூறுவது, "நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்."
நாட்கள் பொல்லாதவைகள் என்று ஏன் வேதத்தில் கூறப்பட்டுள்ளது? யாருக்கு பொல்லாதது? உலக மனிதர்கள் அனைவருக்குமே பொல்லாதது. எப்போது இது பொல்லாததாக மாறியது? தேவன் ஒவ்வொரு நாளையும் நல்ல நாளாகக் கண்டார். ஆனால் மனிதன் பாவம் செய்தபோது நாட்கள் பொல்லாததாக மாறிவிட்டது. அழகான ஏதேன் தோட்டத்தை இழந்தான். வேர்வை சிந்த நேர்ந்தது, பிரசவத்தின் போது வேதனையை அனுபவிக்க நேர்ந்தது. நன்மை செய்தால் மேன்மை, தீமை செய்தால் சிறுமை! நாம் செய்யும் நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடைவோம் என்று வேதம் கூறுகிறது.
நாம் நித்தியமான சுக வாழ்வைப் பெற காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு தாலந்தைப் பெற்றவன் தாலந்தை புதைத்து வைத்தான். அவன் பொல்லாதவன், சோம்பல் உள்ளவன் என்கிற பெயரோடு புறம்பான இருளிலே தள்ளப்பட்டான். காலத்தைப் பிரயோஜனப்படுத்தி தாலந்தை பெருக்கிக் கொண்டவர்களுக்கு மேன்மையும் கூடுதல் தாலந்துகளும் கிடைத்தது. எஜமானுடைய சந்தோஷத்தில் பங்குபெறும் பாக்கியமும் கிடைத்தது. (மத்தேயு 25:15-30)
நமக்குக் கொடுக்கப்பட்ட காலங்கள் எவ்வளவு என்பதை நாம் அறியாதிருக்கிறபடியால் தேவன் நம்மை உலகத்தில் வாழ வைத்ததின் நோக்கத்தை முற்றிலும் நிறைவேற்றி அப்.பவுலைப் போல் என் ஓட்டத்தை முடித்தேன் என்று சொல்லும் அளவுக்கு வெற்றியாய் ஓடி முடிக்க வேண்டும். நாம் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுவோம். ஒருவரும் நமது கீரிடத்தை எடுத்துக் கொள்ளாதபடி ஜாக்கிரதையாய் ஓடுவோம். ( வெளி. 3:11)
- Bro. சாமுவேல் மோரீஸ்
ஜெபக்குறிப்பு:
செவ்வாய்கிழமைதோறும் நடைபெறும் இரவு ஜெபத்தில் தேவனுடைய வல்லமை வெளிப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864