By Village Missionary Movement
Saturday, 10-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 10-04-2021
கோபம் மாற வேண்டும்
“...உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” – ரோமர் 12:2
மேற்கிந்திய தீவுகளில் சிமியோன் ப்ளஸ்டர் என்றொரு கோபக்கார மனிதர் இருந்தார். இயேசு அவரது வாழ்வில் வந்தபோது கோபம் மறைந்தது. அவரின் அடிமனதில் ஆத்தும பாரமும், தேவன் மேல் அன்பும் பெருகியது. ஆகவே தன்னால் இயன்ற சிறுசிறு ஊழியங்களை செய்தார். இப்படி ஒருநாள் ஊழியத்திற்கு சென்றபோது ஒரு வீட்டின் கதவை தட்டினார். அவ்வீட்டின் பெண்மணியான திருமதி அப்டைட் வந்து கதவைத் திறந்தாள். கையில் பால்கோப்பை இருந்தது. வெளியில் நிற்பவர் ஒரு கிறிஸ்தவ ஊழியர் என்று அறிந்ததும், கோபம் கொப்பளித்தது, ஒரு கோப்பைப் பால் முழுவதையும் சிமியோனின் முகத்தில் ஊற்றிவிட்டாள். சிமியோன் மென்மையாகச் சிரித்தார். கண்களில் வழிந்த பாலை துடைத்துக் கொண்டே, அருமையான பால் முகத்தில் ஊற்றினதை வயிற்றில் ஊற்றியிருந்தால் நலமாயிருந்திருக்கும் என்று சொன்னார். இந்த வார்த்தையை கேட்ட அப்பெண்மணி வெட்கம் அடைந்தாள். அவரை உள்ளே அழைத்துச் சென்று, குடிக்க பானம் கொடுத்தாள். இயேசுவைப் பற்றி அறிந்து கொண்டாள், அவரின் சாந்தகுணம் அப்பெண்மணியை கிறிஸ்துவுக்கு நேராய் நடத்தியது.
யாத்திராகமம் 2ம் அதிகாரத்தில் மோசே தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, அங்கும் இங்கும் பார்த்து, ஒருவனும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான். மோசே மனிதனை கொலை செய்யும் அளவிற்கு கோபக்காரனாக இருந்தார். யாத்திராகமம் 3ம் அதிகாரத்தில் தேவன் முட்செடியிலே தரிசனமாகி மோசேயை சந்தித்தார். அதன் பிறகு இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து கானான் தேசத்திற்கு வழிநடத்தும்போது மோசேக்கு விரோதமாய் ஜனங்கள் முறுமுறுக்கிறார்கள், பின்பு கல்லெறிந்து கொல்லப் பார்க்கிறார்கள். ஆனாலும் மோசே அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல் அதை தேவனிடம் சொல்லுகிறதைப் பார்க்கிறோம். மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான் என்று மோசேயை குறித்து தேவன் சாட்சி கொடுக்கிறதையும் வேதத்தில் பார்க்கிறோம். “ஒரு கிறிஸ்தவனின் உயர்ந்த குணத்துக்கான உன்னதமான சான்று சுயக்கட்டுப்பாடு” ஆகும். அது ஒவ்வொரு தேவ பிள்ளைகளிடமும் இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! நீங்கள் கோபப்பட்டு எதையுமே சாதிக்கப்போவதில்லை. இரட்சிக்கப்படுவதற்கு முன்பு நீங்கள் கோபக்காரராய் இருந்திருக்கலாம். இப்பொழுதும் நமது ஜென்ம சுபாவம் மாறாமல் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறோமா? நம்மை நாமே சிந்தித்துப் பார்ப்போம். இயேசு கிறிஸ்துவின் அன்பு, அவரது சிந்தை, அவரது சுபாவம் நம் இருதயத்தில் இருக்கும்போது மோசேயை போல எவ்வளவு பிரச்சனைகள், போராட்டங்கள் வந்தாலும் அதைக்குறித்து மற்றவர்கள் மேல் கோபப்படாமல் தேவனிடத்தில் ஜெபிக்கிறவர்களாய் இருப்போம். தேவன் நம்மைக் குறித்தும் நிச்சயம் சாட்சி கொடுப்பார், ஆமென்.
- P. சிவா
ஜெபக்குறிப்பு:
கெத்செமனே வளாகத்தில் நடைபெறும் ஜெபக்கூடார கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடைய, இதற்கான தேவைகள் இன்னும் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250