By Village Missionary Movement
Thursday, 14-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 14.03.2024
ஆவியா, மாம்சமா ?
"…ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்" - ரோமர் 8:6
ஆவியின் சிந்தை என்பது கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையாகும். இன்றைய காலகட்டத்தில் இயேசுவின் போதனையின்படி நடப்பது கடினம் என்று நினைக்கிறோம். போதிப்பவர்களையும், அதன்படி இவர்கள் நடப்பவர்களா? என்று சந்தேகப்படுகிறோம். இதுவே நாம் ஆவியின் சிந்தையை பெறவிடாதபடி தடுக்கும் மாம்ச சிந்தையாக உள்ளது. மாம்சசிந்தை மரணம் என்று வேதம் கூறுவதை அசட்டை செய்து, வேதத்தின்படி நடவாமல் அதாவது தேவனை பிரியப்படுத்தி வாழ்வதைக் காட்டிலும் மாம்சத்தை பிரியப்படுத்தி, மனிதர்களை பிரியப்படுத்தி வாழ்வதையே சிறந்ததாக, மற்றவர்கள் போற்றத்தக்கதாக கருதி வாழ்ந்து வருகின்றனர்.
ஒரு சிலர் தங்கள் குறைகளை ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் குறைகளிலிருந்து வெளிவர விரும்புவதில்லை. உதராணமாக வீண் பெருமையிலும், கோபத்திலும், பொறாமையிலும், தீங்கு செய்வதிலும் துணிகரமாய் இருந்து கொண்டு இவைகள் என்னிடத்தில் உண்டு என்று ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதிலிருந்து விடுதலை பெற மனமில்லை.
குரங்கு ஒன்று தனக்கு பிடித்தமான வேர்க்கடலையை கண்ணாடி பாட்டிலுக்குள் எடுக்க கையை விட்டு அள்ளியது. கையை வெளியே எடுக்க வரவிலலை என்றாலும் கடலையை போட்டுவிட்டு தப்பித்துவர மனதற்றதாய் இருப்பது போல், தங்களுடைய சுபாவம் இதுதான் இதிலிருந்து என்னால் மீளமுடியாது என்கிற மனப்பான்மையுடன் செயல்படுகிறார்கள். தாங்கள் ஆவிக்குரியவர்களாயிருக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆவியின் சிந்தை இல்லாத இவர்கள் மாம்ச சிந்தையின் ஆயுதங்களாகிய பொய், பெருமை, பொறாமை என்பவைகளினால் அநேகரை காயப்படுத்துகிறோம் என்பதை அறியாது இருக்கிறார்கள்.
அநேகர் சத்தியத்தை அறிந்தும், துணிகரமான பாவத்தில் ஈடுபடுகிறார்கள். சாத்தான் ஏவாளை வஞ்சித்தது போல இவர்கள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு, அநேகரை வஞ்சித்து வருகிறார்கள். சாத்தானின் தந்திரங்கள் நமக்கு தெரியாதவைகள் அல்ல என்பதற்கேற்ப இவர்களும் சாத்தானின் தந்திரத்தால் உருவான தாலந்து பெற்றவர்களாயிருக்கிறார்கள். நாம் நம்மிடம் உள்ள தாலந்து மாம்ச சிந்தையால் உண்டானதா? ஆவியின் சிந்தையால் உண்டானதா? என்று சோதித்துப் பார்ப்போம். மற்றவர்களை கெடுக்கும் சிந்தையோடு, குற்றமில்லாதவர்களை குற்றப்படுத்துகிறோமா? உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லை என்றும் கூறுகிறோமா? நாம் படைக்கும் காணிக்கை தேவனுக்கு பிரியமானதாயிருக்க விரும்புகிறோமா? யாவரோடும் சமாதானமாயிருக்கிறோமா? என்று சிந்திப்போம். இல்லாவிட்டால் குஷ்டரோகியின் கையினால் அளிக்கும் லட்டு போல, நமது அர்ப்பணிப்பும் இருக்கும். ஆகவே, நாம் ஆவியின் சிந்தையை அணிந்து கொள்வோம்.
- Bro. செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது மிஷனெரிகளின் பிள்ளைகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864