By Village Missionary Movement
Saturday, 09-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 09.03.2024
கொடுத்திடுவோம்
"…இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்…" - மத்தேயு 25:40
மோட்டார் கார்களின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற ஹென்றி போர்டு என்பவரிடம் ஒரு சமயம் அனாதை விடுதி கட்ட உதவி செய்யுமாறு கேட்கப்பட்டது. அவர் இரண்டாயிரம் டாலர்கள் நிதி உதவிக்கான காசோலையை வழங்கினார். மறுநாள் செய்தி பத்திரிக்கையில் அனாதை விடுதி கட்ட ஹென்றி போர்டு இருபதாயிரம் டாலர்கள் கொடுத்ததாக பிழையுடன் செய்தி வந்தது. இதை அறிந்த விடுதி காப்பாளர் ஹென்றி போர்டை சந்தித்து வருத்தம் தெரிவித்தார். உடனே ஹென்றி போர்டு கவலை வேண்டாம் என்று கூறி மேலும் 18,000 டாலருக்கான காசோலையை அளித்தார். ஆண்டவர் அவரை மேன்மேலும் ஆசீர்வதித்தார்.
சுவிசேஷ புத்தகங்களில் ஒன்றான யோவான் புஸ்தகத்தில் இயேசுவானவர் செய்த அற்புதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில் இயேசுவின் போதனையைக் கேட்க வந்த மக்கள் பசியால் இருப்பதை அறிந்த இயேசு அவர்கள் பசியாற உணவு அளிக்க விரும்பினார். இயேசு செய்த அற்புதத்திற்கு மிகவும் முக்கியமானவராக இருந்தவர் ஒரு சிறு பையன்தான். இந்த சிறு பையன் முன் வந்து கொடுத்த ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமே ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பசியாற காரணமாயிற்று. சிறு பையன் தன்னிடம் இருப்பதை எல்லாவற்றையும் முற்றிலுமாக கொடுத்துவிட்டான். தனக்கு வேண்டும், தன்னுடைய பசிக்கு என்ன செய்வது என்று சற்றும் சிந்திக்காமல் கொடுத்து விட்டான். இதன் விளைவாக இன்றுவரை "ஒரு சிறு பையன்" என்று வேதத்தில் பேசப்பட்டு வருகிறது.
பிரியமானவர்களே! வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம். நாம் கொடுப்பது பெருமைக்காக அல்லாமல், வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் இருக்க வேண்டும். நாம் இந்த உலகில் வரும் போது ஒன்றும் கொண்டு வரவில்லை என்பதால் நாம் வாழும் காலத்திலேயே ஆண்டவர் நமக்கு கொடுத்ததை தேவையுள்ளவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து மகிழுவோம். தேவன் அதில் பிரியமாயிருக்கிறார். ஆகவே "இயன்றதைக் கொடுத்திடுவோம். இல்லாதோருக்கு!" ஆசீர்வாதம் நம்மிடம் இருக்கும்போது கொடுப்பது அல்ல, இல்லாதபோதும், குறைவிலும் கொடுப்பதற்கு கற்றுக் கொள்வோம். ஏமி கார்மைக்கேல் என்ற அம்மையார் கூறுகிறார், "நம் கைகள் காயப்படும்வரை கொடுப்போம்" என்று. மேலும் பில்லிகிரஹாம் என்ற தேவமனிதர் கூறும்போது, "தேவன் நமக்கு இரண்டு கைகளைக் கொடுத்திருக்கிறார். ஒன்று தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ள, மற்றொன்று மற்றவர்களுக்குக் கொடுக்க!" ஆம், நாமும் உதாரத்துவமாய் கொடுத்து இயேசு கிறிஸ்துவின் சிந்தையை பிரதிபலிப்போம்.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது ஆமென் வில்லேஜ் டிவியின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864