By Village Missionary Movement
Thursday, 22-Feb-2024இன்றைய தியானம்(Tamil) 22.02.2024
தைரியமாய் செயல்படுவோம்
"நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம் பண்ணுங்கள்" - எபேசியர் 6:20
1973 ம் ஆண்டு உகாண்டாவில் இடி அமீன் என்ற அதிபரின் ஆட்சி நடைபெற்றது. அவர் கிறிஸ்தவர்களை சுட்டுக் கொன்று வந்தார். அப்போது சோஃப் செம்பஸ்கி என்ற போதகர் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தார். ஒருநாள் போலீசார் துப்பாக்கியுடன் நுழைந்து துப்பாக்கி முனையில் அவரை இழுத்துச் சென்று நாங்கள் உன்னைக் கொல்லப் போகிறோம். உனது கடைசி ஆசையைக் கூறு என்றனர். போதகரோ நடுங்கிய குரலில் உங்களுக்காக ஜெபிக்க வேண்டும். நீங்கள் செய்யப் போகும் இந்தக் காரியத்தைக் குறித்து கர்த்தர் கிருபையாய் உங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்றார். தலைவன் அங்கே கூடி இருந்த ஜனங்களைப் பார்த்தான். அநேகப் பெண்கள் அவனால் விதவைகளாக்கப்பட்டவர்களாய் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்துவிட்டு போதகரிடம் இப்படி இவர்கள் சந்தோஷமாயிருப்பதற்கு காரணம் என்ன என்றான். அதற்குப் போதகர் மரணம் எங்களுக்கு முடிவல்ல. மரணம் நித்திய வாழ்வின் ஆரம்பம் என்றார். போதகர் ஜெபித்தார். தலைவன் அன்று கர்த்தரை ஏற்றுக் கொண்டான்.
சீரிய படைத்தலைவன் வீட்டிற்கு அடிமையாய் அழைத்துச் செல்லப்பட்டு வேலை செய்யும் அடிமை பெண், "தான் ஒரு சிறுபெண் அடிமை" என பாராமல் நாகமானின் குஷ்டரோகம் நீங்க வழி சொன்னாள். அதனால் அவனும் சுகம் பெற்றான். சீரியர்கள் நாகமான் மூலம் தேவனின் மகிமையைக் கண்டனர். அன்றைய தினம் நாகமான் ஆண்டவரை ஏற்றுக் கொண்டான். பவுல் கூட சிறையிலும், தெருவிலும், வீடுகளிலும் ஏன் நீதிமன்றத்திலும் ராஜாக்கள் முன்பாகவும் கூட தைரியமாய் பேசுகிறார். அதனால்தான் அத்தனை சபைகளை உருவாக்க முடிந்தது. தன் உயிரையும் கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்தார். ஆம், முழுமையாக நம்மை அர்ப்பணிக்கும் போது தேவன் தைரியத்தையும் தந்து விடுகிறார். தைரியமாய் விதையுங்கள் கெம்பீரமாய் அறுக்கலாம். ஆனால் இந்நாட்களில் கிறிஸ்துவுக்காக பாராட்டும் வைராக்கியமும் தைரியமும் மக்களிடம் குறைந்து விட்டது.
சிறு எதிர்ப்பு என்றாலும் உயிர் போய்விடுவது போல் பயப்படுகிறோம், தயங்குகிறோம். தயங்காமல் சொல்லும்போது செயல்படும்போது தேவன் நமக்குள்ளிருந்து தேவனே செயல்படுகிறார். சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள் என்கிறார் இயேசு. தைரியமில்லாதவன் கூர்மையில்லா கத்தி போன்றவன். அவனால் எதையும் செய்ய இயலாது, அவனால் எந்தப் பயனுமில்லை. தைரியமும் வைராக்கியமும் உள்ளவர்களைக் கொண்டே தேவன் தம் திட்டத்தை நிறைவேற்றி முடிக்கிறார்.
- Bro. குணசீலன்
ஜெபக்குறிப்பு:
கைப்பிரதி ஊழியங்கள் மூலம் சந்திக்கப்படுவோர் தேவனை அறிந்து கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864