By Village Missionary Movement
Wednesday, 21-Feb-2024இன்றைய தியானம்(Tamil) 21.02.2024
பிள்ளையை எப்படி வளர்க்கிறீர்கள்?
"பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான்" - நீதி. 22:6
எனக்குத் தெரிந்த ஒருவன் தன் சிறுவயதிலிருந்தே துணிகரமாய் சிறுசிறு தவறுகளைச் செய்து வந்தான். அவன் பெற்றோரும் அதைக் கண்டிக்காமல் விட்டுவிட்டு அவன் செய்த தவறை சுட்டிக்காட்ட தங்களிடம் வருபவர்களிடம் என்மகன் அவ்வாறெல்லாம் செய்ய மாட்டான் என்று சொல்லியனுப்பி தன் மகனின் தவறை மேற்பூச்சாக பூசி மறைத்து விடுவார்கள். இது அவன் பின்நாட்களில் துணிகரமாய் அநேக தவறுகள் செய்வதற்கு காரணமாகிவிட்டது. அவன் சொந்த ஊரில் வாழும் நாட்களை விட சிறைச்சாலையிலிருக்கும் நாட்களே அதிகம். இது இப்போதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. இதனால் அவன் மனைவி, பிள்ளைகள் மட்டுமல்ல பெற்றோர், உற்றார், உறவினர்கள் என பலரும் பலவித இன்னல்களுக்கும், வேதனைகளுக்கும் ஆளாகின்றனர்.
பரிசுத்த வேதாகமத்தில் பிரதான ஆசாரியனான ஏலியின் பிள்ளைகளான ஓப்னி, பினெகாஸ் இருவரும் பேலியாளின் மக்களாயிருந்தார்கள். அவர்கள் கர்த்தரை அறியவில்லை. (1சாமு. 2:12) இது சரி, இது தவறு இப்படி பாவம் செய்தால் இவ்வாறு தண்டனை, வியாதி, சாபங்கள் வரும் என்று மற்றவர்களுக்கு போதித்த ஏலிக்கு தன் பிள்ளைகளைச் சரியான பாதையில் வழிநடத்த முடியவில்லை. அடுத்த பிரதான ஆசாரியர்களாக வரவேண்டிய பிள்ளைகள் ஆசரிப்புக் கூடார வாசலிலேயே ஆண்டவர் அருவருக்கிற அநேக காரியங்களை செய்தார்கள். இதனால் கர்த்தரின் கடுங்கோபத்திற்கு ஆளானார்கள். வாலவயதில் இருவரும் ஒரே நாளில் செத்தது மட்டுமல்ல, பின்சந்ததிக்கும் இந்த சாபங்கள் தொடந்தது. ஒரு வேளை மீந்திருப்பவனும் ஒரு அப்பத்துணிக்கைக்காகவும், பணத்துக்காகவும், ஆசாரிய ஊழியத்தில் தன்னை சேர்த்துக் கொள்ளுமாறு மற்ற ஆசாரியனிடம் கெஞ்ச வேண்டிய நிலை! இத்தனை வேதனைகளுக்கும் காரணம் ஏலி என்னும் ஆசாரியன் தன் பிள்ளைகளை சரியான விதத்தில் நடத்தாததே!
அன்பு பெற்றோரே! எத்தனையோ தம்பதிகள் குழந்தைகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் போது, ஆண்டவர் தந்த சுதந்திரமான பிள்ளைகளை எப்படி வளர்க்கிறோம்? இன்றும் அநேக பிள்ளைகள் மொபைல் போன்களிலும் மது போதைகளிலும், காதல் என்கிற மாய வலைகளிலும், விபச்சாரத்திலும், வேசித்தனத்திலும், சீர்கேடான செயல்களிலும் சிக்கியிருக்க காரணமென்ன? பரிசுத்த வேதாகமம் கூறுகிறது, "தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான்." இதை வாசிக்கிற பெற்றோர்களே, நீங்கள் உங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறீர்கள்?
- A. சிமியோன்
ஜெபக்குறிப்பு:
பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் மூலம் பயன்பெறும் நபர்கள் தேவனை அறிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864