By Village Missionary Movement
Saturday, 17-Feb-2024இன்றைய தியானம்(Tamil) 17.02.2024
கூப்பிடு
"கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்" - சங்கீதம் 72:12
தவறி குழியிலே விழுந்த ஒருவர் தனக்குள்ளே புலம்பி அழுதுகொண்டிருப்பாரானால் அவருக்கு எந்த உதவியும் கிடைக்காது. ஆனால் தன்னை இக்குழியிலிருந்து காப்பாற்றும்படி சத்தமிட்டுக் கூப்பிடுவாரானால் நிச்சயம் அவருடைய சத்தத்தைக் கேட்டு யாராவது ஒருவர் உதவி செய்வார். குழியிலிருந்து தூக்கிவிடப்படுவார். அழுகிற பிள்ளைக்குத்தான் சாப்பாடு கிடைக்கும் என்ற பழமொழியும் உண்டு.
ஆம், இயேசு கிறிஸ்து இந்த பூமியில் உலாவிய நாட்களில் பர்திமேயு என்னும் பார்வையற்றவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். அவ்வழியே இயேசு வருகிறார் என்றதும் மக்கள் சத்தத்திற்கும் மேல் இயேசுவை நோக்கி சத்தமிட்டு கூப்பிடுகிறார். உடனே இயேசு நின்று பார்வை கொடுக்கிறார். அதே போல் என்ன தேவையென்றாலும் நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போது எந்த பாகுபாடுமின்றி தேவன் உதவி செய்கிறார். நூற்றுக்கதிபதி, ஜெபஆலயத்தலைவன் இவர்கள் கூப்பிடுதலுக்கும் பதில் கொடுத்தார். குஷ்டரோகிகள் கூப்பிட்டபோதும் பதில் கொடுத்தார்.
நம் தேவன் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், . . . சமீபமாயிருக்கிறார் என சங்கீதம் 145:18ல் வாசிக்கிறோம். மேலும் (தம்மை). . . நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.(சங்கீதம் 86:5) என்று பார்க்கிறோம். நாம் உண்மையாய் முழு இருதயத்தோடு கூப்பிட்டால் செவி கொடுத்து பதிலளிப்பார். ஏனெனில் அவர் முகத்தை பார்க்கிறவர் அல்ல கூப்பிடுகிறவர்களின் உள்ளத்தை பார்க்கிறவர். நமக்கு எப்பேர்ப்பட்ட கஷ்டம், நஷ்டம், இழப்புகள், துன்பம் இருந்தாலும் அவைகள் எல்லாவற்றிலிருந்தும் நம்மை விடுவிக்க வல்லவர் நம் தேவன்.
இதை வாசிக்கும் அன்பரே! நீங்கள் உங்கள் பாடுகள், கஷ்டங்களில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்; அவர் உங்களை விடுவித்து காப்பார். நீங்கள் எப்படியிருந்தாலும் விடுவிக்க வல்லவர்; பட்சபாதம் பார்க்கிறவர் அல்ல. மனிதர்கள்தான் பட்சபாதம் பார்ப்பார்கள். அவர் உள்ளத்தைப் பார்க்கிறவர். நீங்கள் கூப்பிட்டால் தான் அவர் வந்து செயல்படுவார். எனவே அவரை நோக்கி கூப்பிட்டு விடுதலை பெறுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
- Mrs. கிளாடிஸ் முரளி கிதியோன்
ஜெபக்குறிப்பு:
தோழமை ஊழியர்களை எழுப்புதலின் ஆயுதங்களாக எடுத்து தேவன் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864