By Village Missionary Movement
Wednesday, 07-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 07-04-2021
பேராபத்து
“ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.” – சங்கீதம் 50:15
கடந்த வருடத்தில் பெரிய ஆபத்தான கொள்ளை நோயான கொரோனா உலகத்தில் உள்ள பல நாடுகளில் உள்ள ஜனங்கள் மீது வந்ததை நாம் பார்க்க முடிந்தது. எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள் ஒரு பக்கம்! மரண பயம் ஒரு பக்கம்! கொரோனா ஆபத்து வராமல் இருக்க அநேக நாடுகளில் அநேகர் ஆண்டவரை நோக்கி முழங்கால் படியிட்டு ஜெபித்ததை பார்த்திருப்பீர்கள். எப்பொழுதுமே ஒரு மனிதனுக்கு சரீரப் பிரகாரமாக கொடிய வியாதி, விபத்துகள் அல்லது உலகப் பிரகாரமாக கடன்கள், வியாபாரத்தில் நஷ்டம், பூகம்பம், சுனாமி போன்ற பல ஆபத்துக்கள் வரும்போது கடவுளை நோக்கி கூப்பிடுவது வழக்கம். ஆனால் இவை எல்லாவற்றை விட பெரிய ஆபத்து இந்த உலகத்தில் இருக்கிறது அதுதான் பாவம். இதற்கு தப்பி பிழைப்பதுதான் முக்கியமானது, ஏனென்றால் பாவம்தான் இந்த உலகத்தில் பரிசுத்தமாய் வாழ்வதற்கும், மரணத்திற்கு பிறகு நித்தியமான பரலோக வாழ்க்கைக்கு போகவும் தடையாக இருக்கிற மிகப் பெரிய ஆபத்து. இந்த ஆபத்திலிருந்து நம்மை விடுவிக்க முதலாவது ஆண்டவரை நோக்கி கூப்பிட வேண்டும்.
தாவீது இந்த உலகத்தில் எதிரிகளால் பலவிதங்களில் ஆபத்து வரும்போதெல்லாம் ஆண்டவரை நோக்கி கூப்பிடுகிறார். ஆனால் பத்சேபாளிடத்தில் பாவம் செய்ய வந்த சந்தர்ப்பம் ஆபத்தாக தெரியவில்லை. அதைப் போல் சிம்சோன் கழுதை தாடை எலும்பைக் கொண்டு ஆயிரம் பேரை கொன்று குவித்து விட்டு தண்ணீர் தாகத்தோடு செத்துவிடுவேன் என்று ஆண்டவரை நோக்கி கூப்பிடுகிறார். அதைப்போல கண்கள் குருடாக்கப்பட்டவனாய் பெலிஸ்தர் கையால் செத்துவிடுவேன் என்று ஆண்டவரை நோக்கி கூப்பிடுகிறார். ஆனால் விபச்சார ஸ்திரீயினிமித்தமாய் பாவம் வரும் போது தன்னை இப்பாவத்திலிருந்து காப்பாற்றும்படி ஆண்டவரை நோக்கி கூப்பிடவில்லை.
இன்றைக்கு இந்த உலகத்தில் சோசியல் மீடியா மூலமாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஆன்லைன் கேம், கெட்ட நண்பர்கள் என பல விதத்தில் பாவம் நம்மை நெருக்குகின்றது. இப்படி மிகப்பெரிய ஆபத்தான இந்த பாவம் நம்மை நெருக்கும்போது நம்மில் எத்தனை பேர் இப்பாவத்திலிருந்து நம்மை காக்கும்படி ஆண்டவரை நோக்கி கூப்பிடுகிறோம்? இப்படிப்பட்ட பாவத்தில் விழுந்த அநேகர் தற்கொலை பண்ணிக்கொள்ளுகிறார்கள். வேத வசனம் சொல்கிறது, யாக்கோபு 1-15ல் “பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.” எனவே பாவம் என்கிற பேராபத்து நம்மை நெருங்கும் போதே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி அனுதினமும் கூப்பிடுவோம். அவர் நம்மை நிச்சயமாகவே விடுவிப்பார்.
- P.V. வில்லியம்ஸ்
ஜெபக்குறிப்பு:
தேசத்தை சுதந்தரிப்போர் பயிற்சி முகாமில் தேவசெய்தியளிக்கும் தாசர்களை தேவன் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250