By Village Missionary Movement
Monday, 12-Feb-2024இன்றைய தியானம்(Tamil) 12.02.2024
சிறந்த விதை
"கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்" - சங்கீதம் 126:5
மூத்த ஊழியர் ஒருவர் விசுவாசிகளிடம் இவ்வாறாக கேள்வி கேட்டார். பரலோகத் தோட்டத்திலே விதைக்கப்பட வேண்டிய விதை எது? என கேட்டார். ஒவ்வொருவரும் தம் தம் கருத்தை கூறினார்கள். சிறந்த விதை எதுவென ஊழியர் கூற நாமும் கேட்போமா?
அன்பென்னும் விதை: துன்மார்க்க ஜீவியம் வாழும்படி தன்னை விட்டு பிரிந்து சென்ற இளைய குமாரனுக்காக காத்திருந்தார் தகப்பன். எல்லாவற்றையும் இழந்து அலங்கோல நிலையில் வந்த அவனை கண்டு ஓடி போய் கட்டிக்கொண்டு முத்தமிட்டு விருந்து கொண்டாடினாரே! தகப்பன் அன்பு எத்தனை பெரியது! தன்னை பகைத்து விற்று போட்ட தன் சகோதரர்கள், எகிப்திற்கு தானியம் கொள்ளும்படி தன்னிடத்தில் வந்தபோது யோசேப்பின் உள்ளம் அன்பினால் பொங்கியதே! அன்பை விதையுங்கள்; கெம்பீரமாய் அறுப்பீர்கள்.
நன்மை என்னும் விதை: சீரிய படைத்தளபதி நாகமானின் குஷ்டரோகம் மாற அடிமை பெண்ணாக வந்த அந்த சிறு பெண் ஆலோசனை கூறுகிறாள். தன்னை அடிமையாக்கிய நாகமானின் செயலுக்கு தீமைக்கு தீமை செய்யாமல் தீமையை நன்மையினால் வென்றாள். சிறு பெண்ணின் ஆலோசனைப்படி செய்த நாகமான் சுகம் பெற்றான். நன்மையை விதைத்தாள்; சிறு பெண் இன்று வரை வேதத்தை வாசிக்கிற அனைவராலும் பேசப்படுகிறாள். இன்னும் பலன் கொடுக்கிறாள்.
கண்ணீர் எனும் விதை: கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்துடன் அறுப்பார்கள் என்கிறது வேதம். தேவனுடைய சமூகத்தில் கண்ணீர் வடித்த அன்னாளுக்கு சாமுவேல் என்னும் குழந்தையை தந்தார். இரவும் பகலும் கண்ணீரே உணவாயிற்று என்ற தாவீதை ராஜாவாக்கி அழகு பார்த்தவர் நம் தேவன். மரித்த லாசருவை இழந்து கண்ணீர் விட்ட சகோதரிகளுக்கு நான்கு நாள் கழித்து லாசருவை உயிரோடு எழுப்பி தம் வல்லமையை வெளிப்படுத்தினாரே! நமது கண்ணீர் என்னும் விதை ஆச்சரியமான அறுவடையை தரும்.
சுவிசேஷம் என்னும் விதை: சுவிசேஷத்தை விதைப்பது அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய கடமையெனக் கூறுகிறார். அப்படி சுவிசேஷத்தை விதைத்து ஆத்தும அறுவடையை காண்பது எவ்வளவு ஞானமான செயல்!
ஆம், அன்பானவர்களே! கர்த்தரை பிரஸ்தாப்படுத்துகிறவர்களே! நீங்கள் அமரிக்கையாய் இருக்கலாகாது என்கிறது வேதம். ஏதாவது செய்யுங்கள்; அன்பினை விதையுங்கள். யாவரும், எங்கேயும் இந்த விதையை விதைக்க முடியும். விளையச் செய்கிறவர் ஆண்டவர்! மேற்கண்ட சிறந்த விதைகளை விதைத்து தேவனுடைய தோட்டத்தை நிரப்புவோம்.
- Mrs. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
நம்மோடு இணைந்துள்ள தெபொராள்களை கர்த்தர் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864