By Village Missionary Movement
Friday, 09-Feb-2024இன்றைய தியானம்(Tamil) 09.02.2024
உறுதியான விதை
"உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர்" - ஏசாயா 26:3
நான் ஆறாவது படிக்கும் போது என் தெருவில் நடைபெற்று வந்த ஞாயிறு பள்ளி வாயிலாக ஆண்டவருடைய அன்பை அறிந்து கொண்டேன். அங்கு கற்றுக் கொடுத்த வேத வசனம் எனக்குள் பசுமரத்தாணி போல் பதிந்தது மட்டுமின்றி வேத வசனம் விதையாகவும் என் உள்ளத்தில் கிரியை செய்ய தொடங்கியது. தொடர்ந்து என் பகுதியில் நடைபெற்று வந்த வீட்டு ஜெபக்கூட்டம், வாலிபர் கூடுகையில் கலந்து கொள்ள தொடங்கினேன். ஒன்பதாவது படிக்கும்போது என்னுடைய வாழ்க்கையை ஒரு வாலிபர் கூடுகையில் வட இந்திய பகுதிகளில் முழு நேரம் மிஷனரி பணிக்காக அர்ப்பணித்தேன். வருடங்களும் கடந்தன. இயேசப்பாவிற்கு முதலிடம் கொடுப்பதன் மூலமாக என்னுடைய ஸ்கூல், காலேஜ் படிப்பில் ஆண்டவர் நல்ல மதிப்பெண்களை தந்தார்.
பாலிடெக்னிக் படித்த எனக்கு ஒரு பிரபலமான கல்லூரியில் லேப் டெக்னீசியன் வேலை, நல்ல சம்பளம். நாட்கள் செல்லச் செல்ல அர்ப்பணிப்பை நான் மறந்துவிட்டேன். ஆனால் கர்த்தர் நான் செய்த அர்ப்பணிப்பை மறக்கவே இல்லை வாழ்க்கையில் மேரேஜ் என்ற ஒரு பெரிய டர்னிங் பாயிண்டு இயேசப்பா என்னை அவர் சமூகத்தில் வந்து விழும்படி செய்தார். நானும் பொருத்தனை ஜெபம் செய்தேன். வட இந்தியா பகுதிக்கு மிஷினெரியாக செல்ல வேண்டும் என்றால், வட இந்திய பகுதிகளில் ஊழியம் செய்யும் எதிர்கால வாழ்க்கை துணையை தாரும் என ஜெபித்தேன். இரண்டு வருடங்கள் போராட்டங்கள், இன்னல்கள், கண்ணீர்கள், ஆனால் கர்த்தரை உறுதியாய் பற்றி கொண்டேன். இரண்டு வருட முடிவில் ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுத்தார் சட்டீஸ்கர் பகுதியில் ஊழியம் செய்கிற வாழ்க்கை துணையை கர்த்தர் ஏற்படுத்திக் கொடுத்தார். எனக்கு இயேசு ஹிந்தி மொழியை கற்றுக் கொடுத்தார் சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா பகுதியில் சில வருடங்கள் குடும்பமாக ஊழியம் செய்தோம். தற்போது மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கிராம மிஷனரி இயக்கத்தில் குடும்பமாக தேவ ஊழியத்தை நிறைவேற்றி வருகிறோம்.
பரிசுத்த வேதாகமத்தில் ரூத் என்ற பெண்மணியை குறித்து வாசிக்கும் போது ரூத்தோ தன் மாமியாரை விடாமல் பற்றிக் கொண்டாள். ரூத்துக்குள் இருந்த உறுதியான விதை பெரிய சந்ததி உருவாக காரணமாக இருந்தது. ஆம், சிறு வயதில் எனக்குள் விதைக்கப்பட்ட விதை, ஆண்டவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையை தூண்டியது. விதையாய் எனக்குள் இருந்த விசுவாசம் இன்று முழுநேர மிஷனெரியாய் பலன் கொடுக்கிறது. இதை வாசிக்கின்றதான நீங்களும் உங்களுடைய பகுதியில் வேத வசனங்களை விதைக்கலாமே! ஆரம்ப நாட்களில் பலன் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். ஆனால் ஒருநாள் நிச்சயம் விதைத்த விதையின் பலனை காண்போம். விதையை விதைப்பதற்கு தயக்கம் வேண்டாம். இன்றே விதைப்போம்! பரலோகில் பலன் காண்போம்! விதைக்க வாரீர்!!
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நாளை நமது வளாகத்தில் நடைபெறவுள்ள 24மணிநேர உபவாச ஜெபத்தில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவரும் ஜெப ஆவியினால் நிரப்பப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864