Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  06-04-2021
Share:

By Village Missionary Movement

Tuesday, 06-Apr-2021

இன்றைய தியானம்(Tamil)  06-04-2021

விழித்திடு, ஜெபித்திடு

“நாம்.... அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும்.” – 1 தீமோத்தேயு 2:2

கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் சண்டை சேவல்கள் சிலவற்றை வளர்த்து வந்தனர். திடீரென்று ஒருநாள் இரவு அவைகள் வித்தியாசமாக ஒலி எழுப்பவே, காரணம் என்னவென்று அறிய, வீட்டுக்காரர் வந்து அவற்றின் கூண்டை திறக்க அது தாவி வெளியே ஓடிவந்து மிகவும் அதிகமாக கத்தியது. என்னவென்று அங்கே பார்த்தால் வீட்டின் தண்ணீர் வடிகுழாயின் வழியாக பாம்பு உள்ளே புகுந்திருந்தது. அந்த செய்தியை அறிவிக்கவும், வீட்டில் உள்ளவர்களை காப்பாற்றவும் ஐந்தறிவுள்ள சேவல் தன்னால் முடிந்த மட்டும் சத்தம் எழுப்பி எதிரியால் தீங்கு வராமல் பாதுகாத்தது. 

அக்காலத்திலே இஸ்ரவேல் ஜனங்களை ஆள ராஜாக்கள் இருந்ததில்லை. கர்த்தரே அவர்களை நடத்தினார். பின்பு நியாயாதிபதிகள், தீர்க்கதரிசிகள் மூலமாகவும் ஆளுகை செய்தார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ மற்ற ஜனங்களைப் போல தங்களை ஆள ராஜாக்கள் வேண்டும் என்று கேட்டபோது அவர்களின் இஷ்டத்திற்கு ஒப்புக்கொடுத்து சவுலை ராஜாவாக ஏற்படுத்திக் கொடுத்தார். அது அவருடைய பார்வையில் விசனமாக இருந்தது. பின்பு சவுலை தள்ளிவிட்டு தாவீதை ராஜாவாக ஏற்படுத்தினார். தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் இருந்து ஜனங்களை தேவ ஆலோசனையின்படி ஆளுகை செய்தான். அதன் பின் வந்தவர்கள் தேவனை விட்டு வழி விலகிப்போய் நடந்தபடியால் தேசம் அடிமைத்தனத்திற்குள் சென்றது. 

நாம் தேசத்தில் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படி ஆளுகிறவர்களுக்காக ஜெபிக்க வேண்டியது நமது கடமை. இன்றைய காலகட்டத்தில் தேவனின் ஆளுகை நம் தேசத்தில் காணப்படவும், அவருக்கு சித்தமானவர்கள் மட்டுமே அதிகாரத்திற்கு வரவும் நாம் ஜெபிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. நீதியோடும், உண்மையோடும், மனித நேயத்தோடும், கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும் ஆளுகிற தலைவர்கள் எழும்ப வேண்டும். பணம், பதவி, புகழுக்கு ஆசை இல்லாதவர்களாய் மக்களின் நலனை கருத்தில் கொண்டு திறமையோடு நல்லாட்சி செய்யக்கூடிய தலைவர்கள் எழும்ப நாம் ஜெபிக்க வேண்டும். எவ்வாறாக ஒரு சேவல், எதிரி தன் வீட்டிற்குள் நுழையாதபடி சத்தம் கொடுத்து தன் எஜமானின் குடும்பத்தை பாதுகாத்ததோ அதுபோல கிறிஸ்தவர்களாகிய நாமும் நம் தேசத்தின் மேல் அக்கறை கொண்டவர்களாய் தேவ சித்தம் உள்ளவர்கள் மட்டுமே அதிகாரத்திற்கு வர ஊக்கத்துடன் ஜெபிப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் இராஜரீகம் செய்கிறார். எதுவும் அவர் கை மிஞ்சி நடக்காது. ஆகவே பதற்றமின்றி ஜெபத்தோடு இன்று நம்முடைய ஓட்டுகளை பதிவு செய்வோம். 
-    Bro. ஹனிஷ் சாமுவேல்

ஜெபக்குறிப்பு:
தேசத்தை சுதந்தரிப்போர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ள தேவப்பிள்ளைகள் கர்த்தருக்கென்று எழும்பி பிரகாசிக்க ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al