By Village Missionary Movement
Wednesday, 31-Jan-2024இன்றைய தியானம்(Tamil) 31.01.2024
தியாகமா? வாய்ப்பா?
"தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?" - ரோமர் 11:35
கிறிஸ்தவ உலகிலே, ஆண்டவருக்கென்று காணிக்கை கொடுத்தால் அது தியாகக் காணிக்கையென்று சொல்லப்படுகிறது. வாலிபன் ஒருவன் மிஷனெரியாக சென்றால், "அவன் வாழ்க்கையையே தேவனுக்கு தியாகம் செய்து விட்டான்" என்று சபை மக்கள் சொல்வார்கள். ஒருவர் ஏழைகளுக்கு அதிகமாய் உதவி செய்தால் தியாகமாக உதவுகிறார் என்று கூறுவர். இப்படிப்பட்ட தியாகங்களைக் குறித்து மிஷனெரி டேவிட் லிவிங்ஸ்டன் கூறிய கருத்தை இந்த நாளில் தியானிப்போம்.
அநேக ஆண்டுகளாக ஆப்பிரிக்காவில் தியாகமாக ஊழியம் செய்த டேவிட் லிவிங்ஸ்டனின் வயதான காலத்தில் அவரை சந்திக்க இங்கிலாந்திலிருந்து ஸ்டான்லி என்ற பத்திரிக்கையாளர் வந்தார். அநேக காரியங்களைக் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, லிவிங்ஸ்டனின் ஊழியத்தைக் குறித்து இங்கிலாந்து மக்கள் மிக மிக உயர்வாக கருதுவதாக கூறினார். பின்பு, தான் தற்போது செல்லவிருக்கும் கப்பலில் லிவிங்ஸ்டனையும் தன்னுடன் இங்கிலாந்திற்கு அழைத்தார். இந்த வாய்ப்பை தவற விட்டால் லிவிங்ஸ்டன் இனி இங்கிலாந்து வருவது மிகவும் கடினம் என்றும் கூறினார். ஆனால் லிவிங்ஸ்டனோ அதை மறுத்து விட்டு ஆப்பிரிக்காவிலேயே இருந்து விட்டார். ஸ்டான்லி கிளம்பிய மறுநாள் தேதியில் லிவிங்ஸ்டன் - தனது டைரியில் இப்படி ஒரு குறிப்பை எழுதியிருந்தார். "என் வாழ்க்கையின் பெரும் பகுதியை நான் ஆப்பிரிக்காவில் மிஷனெரியாகக் கழித்ததை மக்கள் பெரிய தியாகமாகப் பேசிக்கொள்கின்றனர். தேவனிடத்தில் பெரிய கடன்பட்டிருக்கும் நாம் அக்கடனில் ஒரு சிறுபகுதியை அவருக்கு திருப்பிக் கொடுப்பது தியாகமா? மனதிற்கு நிறைவைத் தரும் காரியத்தை செய்வது தியாகமா? நித்தியத்தில் மிகுந்த பலனைத் தரும் பணியை செய்வது தியாகமா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை! தியாகம் என்னும் வார்த்தையைத் தூர எறிவோம். அதை வாய்ப்பு அல்லது பாக்கியம் என்றே கருதுவோம். மகிமையான பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதை துறந்து நமக்காக பூமிக்கு இறங்கி வந்த இயேசு கிறிஸ்துவின் தியாகத்திற்கு முன் நம்முடைய தியாகம் ஒன்றுமில்லாமல் போகிறது. நான் தியாகம் ஒன்றும் செய்யவில்லை" என்று எழுதி வைத்தார்.
பிரியமானவர்களே! நாம் ஆண்டவருக்காக செய்யும் காரியங்களை எப்படி பார்க்கிறோம்? காணிக்கை கொடுப்பது, ஊழியம் செய்வது போன்றவற்றைக் குறித்து எப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருக்கிறோம்? அவைகளை தேவன் நமக்கு கொடுத்த சிலாக்கியமாக நினைக்கிறோமா அல்லது சர்வ உலகத்திற்கே ஏதோ ஒன்றை நாம் செய்து விட்டதாக சிறுபிள்ளைத்தனமாக எண்ணிக் கொண்டிருக்கிறோமா? டேவிட் லிவிங்ஸ்டனின் இந்த உயர்வான கிறிஸ்தவ சிந்தனை உங்கள் உள்ளான எண்ணங்களை உயர்த்தட்டும்.
- J. சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
கிராம ஊழியத்தில் சுவிசேஷத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்கள் இயேசுவின் அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864