By Village Missionary Movement
Tuesday, 30-Jan-2024இன்றைய தியானம்(Tamil) 30.01.2024
ஆவிக்குரிய முதிர்ச்சி
"…நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்" - 1 கொரி. 13:11
கிறிஸ்துவுக்குள் பிறந்த நாம் ஒவ்வொருவரும் வளர வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார். எதில் வளர வேண்டும்? ஆவிக்குரிய வாழ்வில், வேத சத்தியத்தில், நற்செயல்களில், தேவனோடுள்ள ஐக்கியத்தில், ஆழமான ஜெபஜீவியத்தில்....என சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி படிப்படியாக வளர்ந்து ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ளவர்களாக நாம் மாற வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார். முதிர்ச்சியின் அடையாளம்தான் என்ன? அதை எப்படி கண்டுகொள்ளக்கூடும்? என கேட்போமானால், "குறைகுடம் கூத்தாடும்; நிறைகுடம் நீர்த்தளும்பாது" என்ற முதுமொழிக்கேற்ப, ஆவிக்குரிய வாழ்வில் வளராதவர்கள் குறைகுடத்தைப் போல் சிறு சிறு காரியங்களிலும் மனத்தாங்கல் அடைவர். கிறிஸ்தவனாகிய எனக்கு மட்டும் ஏன் இந்த பாடு, எனக்கெதற்கு உபத்திரவம்?" என சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் அங்கலாய்ப்பின் சத்தத்தை எப்போதும் அவர்களிடம் கேட்க முடியும். ஆனால் ஆவிக்குரிய முதிர்ச்சியுடையவர்களோ தேவ அன்பினால் நிரப்பட்டவர்களாக நிதானமாய் இருப்பர். அவைகளில் ஒருசிலவற்றை சிந்தித்து, வளர்ச்சியில் நமது நிலைமை எப்படியிருக்கிறதென்று நம்மை நாமே ஆராய்வோமா?
பிறருக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உடையவர்களாயிருப்பர். இப்போது தாங்கள் வகிக்கும் பொறுப்பை, பதவியை, முதன்மை இடத்தை விட்டுக் கொடுத்து, தாழ்ந்த நிலையில் ஊழியம் செய்ய முன்வருவார்கள். அதாவது எல்லோருக்கும் கடையனாக அனைவரது கால்களையும், கழுவுமளவிற்கு "பணிபுரியும் சிந்தை" உள்ளவர்களாக இருப்பார்கள் (லூக்கா. 14:11). வேதத்திலே யோனத்தான் சவுல் ராஜாவின் சொந்த மகனாய் இருந்தாலும் தான் சிநேகித்த தாவீதிடம், "நீர் இஸ்ரவேலின் மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்" (1சாமுவேல் 23:17) என்றாரே! இவர் நமக்கு மாதிரியல்லவா?
மற்றவர்கள் எல்லோரையும் தன்னை விட மேலானவர்களாக எண்ணுவார்கள். படிக்காதவர்கள், ஏழைகள், இரட்சிக்கப்படாதவர்கள் இப்படி யாராயிருந்தாலும் அவர்களை தன்னை விட மேன்மையாய் எண்ணி, முழு கனத்தையும் கொடுத்து அவர்களோடு நட்பு பாராட்டுவார்கள். (பிலி. 2:3).
கனம் பண்ணுவதில் முந்திக் கொள்வார்கள். இவன் என்னை விட வயதில், படிப்பில், பதவியில், செல்வாக்கில் குறைந்தவன்தானே! ஆகவே முதலில் அவன் பேசட்டும், பின் நான் பேசுவேன் என்ற எண்ணம் கடுகளவும் கொண்டிருக்கமாட்டார்கள். காரணம், தங்களைக் குறித்த எந்த பெருமையான எண்ணமும் அவர்களுக்கு இராததால், எந்தவித தடையுமின்றி பிறரை கனம் பண்ண முந்திக் கொள்வார்கள். (ரோமர். 12:10)
நாம் எப்படி? நம்மிடம் முதிர்ச்சி உண்டா. அல்லது எதற்கெடுத்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து, தன்னோடுள்ளவர்களையெல்லாம் புகார் செய்யும் குழந்தையாய் இருக்கிறோமா? அல்லது ஆவிக்குரிய புருஷர்களாயிருக்கிறோமா?
- S. ஜெயக்குமாரி
ஜெபக்குறிப்பு:
ட்ரக் அடிக்ட் சென்டர் ஊழிய திட்டத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864