Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  05-04-2021
Share:

By Village Missionary Movement

Monday, 05-Apr-2021

இன்றைய தியானம்(Tamil)  05-04-2021

சோர்ந்து போகாதே

“நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.” – எபிரெயர் 10:39

அமெரிக்காவில் சாட் பெண்ணிங்டன் என்ற கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவர் இருந்தார். இவர் அநேக போட்டிகளில் கடினமாக விளையாடினதின் நிமித்தம் கால்பந்து விளையாட முடியாத அளவிற்கு சரீரத்தில் அநேக காயங்களை உடையவராக காணப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட காயங்களால் இருமுறை அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாயிருந்தது. மாதக்கணக்காக உடல்நலத்திற்காக மருந்துகளை எடுத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து பல வார பயிற்சிக்கு பின்பாக உடல்நிலை தேறினார். மீண்டும் கால்பந்து விளையாடும்படி களத்தில் இறங்கி சிறுசிறு போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்று இருமுறை அந்த ஆண்டின் தேசிய கால்பந்து விளையாட்டு வீரருக்கான சிறப்பு விருதினை சாட் பெற்றுக் கொண்டார். 

கிறிஸ்துவுக்குள் நமது ஆவிக்குரிய வாழ்வும் கடினமான பயிற்சிகள், போராட்டங்கள் என நிரம்பி காணப்படுகின்றன. நமது ஆவிக்குரிய யுத்தத்தில் சில நேரங்களில் பலத்த காயங்கள் ஏற்படுகின்றன. அது நாம் மீண்டும் எழும்ப முடியாத அளவிற்கு நம்மை பின்வாங்கச் செய்கின்றது. இப்படிப்பட்ட பாடுகள், போராட்டங்களில் அநேகர் துவண்டு போய் தங்களது ஆவிக்குரிய ஓட்டத்தை நிறுத்தி விடுகிறார்கள். இன்று நாம் வாசித்த வேதபகுதியில் எபிரெய நிருப ஆக்கியோன் இப்படியாக எழுதுகிறார். நாம் கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாய் இராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாய் இருப்போம் என்று கூறுகிறார். எலியா என்ற தீர்க்கதரிசி தன்னுடைய ஊழிய நாட்களில் சோர்ந்து போகும் பொழுது ஆண்டவர் அவரை தூதனைக்கொண்டு இவ்வாறாக பலப்படுத்தினார். “எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்.” (1இராஜா. 19:7) 

கிறிஸ்துவில் பிரியமானவர்களே! இச்செய்தியை வாசிக்கின்ற நீங்கள் உங்கள் ஓட்டத்தில் தடைபட்டு நிற்பவர்கள் என்றால், உங்கள் குறைகளையும், பலவீனங்களையும் ஆண்டவரிடம் அறிக்கையிடுங்கள். திறந்து மனதுடன் நீங்கள் ஆண்டவரிடம் பேசுங்கள். உங்களை நன்கு அறிந்தவரும், உங்கள் பலவீனங்களில் உதவி செய்கிறவரும் இயேசு ஒருவர் மட்டுமே! உங்களது ஆவிக்குரிய பிரயாணம் தடையின்றி செல்ல எப்பொழுதும் தேவனுடைய உதவியை நாட மறவாதிருங்கள். உங்களை கரம்பிடித்தவர் முடிவுபரியந்தம் நடத்திச் செல்ல வல்லமை உள்ளவராக இருக்கின்றார். அல்லேலூயா! 
-    P. ஜேக்கப் சங்கர் 

ஜெபக்குறிப்பு:
வேதாகமக் கல்லூரியில் இணைந்துள்ள மாணவர்கள் சத்தியத்தில் வேரூன்றி வளர ஜெபியுங்கள்.   

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al