By Village Missionary Movement
Thursday, 25-Jan-2024இன்றைய தியானம்(Tamil) 25.01.2024
விலைக்கிரயம் வீணல்ல
"…அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது" - யோவான் 12:3
பஞ்சாபில் ஒரு மத வைராக்கியமுள்ள சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர் பகத்சிங். அவர் தனது மேற்படிப்பிற்காக கனடா தேசத்திற்கு சென்று பொறியியல் பட்டம் பெற்றார். அங்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை தன் தெய்வமாக ஏற்றுக்கொண்டார். இந்தியாவுக்கு கப்பலில் திரும்பி வரும்போது ஆண்டவருக்காக பணிசெய்ய தீர்மானித்து தன் எதிர்காலத்திற்கு ஆதாரமாக இருந்த இன்ஜினியரிங் சர்டிபிகேட்டை கிழித்து கடலில் எறிந்து, தன்னையும், தனக்குண்டான யாவற்றையும் ஆண்டவருக்கே சொந்தம் என கொடுத்துவிட்டார். பிற்காலத்தில் உலகமெங்கும் 10,000 திருச்சபைகளை நிறுவ ஆண்டவர் அவரை பயன்படுத்தினார். அவரது பரிசுத்தமான வாழ்வு, ஊழியம் இக்கால கிறிஸ்தவர்களுக்கு ஒரு சவால். அவர் எழுதிய புத்தகங்கள் இன்றும் ஊழியர்களையும், விசுவாசிகளையும் உற்சாகமடையச் செய்து வருகின்றன. ஆம், அவரது அர்ப்பணிப்பும் கொடுத்த விலைக்கிரயமும் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றதாய் காணப்பட்டது. ஆகவே தேவன் அவரை உலகமெங்கிலும் வெளிச்சமாய் பயன்படுத்தினார்.
வேதத்திலே, இயேசு சீமோன் வீட்டிலே போஜன பந்தியிருக்கையில் மரியாள் என்ற பெண், தான் இதுவரை பாடுபட்டு சம்பாதித்து வைத்திருந்த விலையுயர்ந்த நளதம் என்னும் தைலத்தை கொண்டுவந்து உடைத்து அதை இயேசுவின் சிரசின் மேல் ஊற்றினாள். இதைக் கண்ட மற்றவர்கள் குறை கூறினார்கள். வீண் செலவு என்றார்கள். ஆனால் அவள் மற்றவர்கள் சொல்வதைப் பற்றிக் கவலைப்படவில்லை. மாறாக ஆண்டவர் என்ன சொல்கிறார் என்பதே அவளது எண்ணமாயிருந்தது. ஆண்டவர் மரியாளைக் குறித்துக் கூறியதைக் கவனியுங்கள். * என்னிடத்தில் நற்கிரியை செய்திருக்கிறாள். (ஆண்டவருக்கு கொடுப்பது வீணல்ல, ஆசீர்வாதம்) * இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். (முடியாததை செய்ய வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. செய்வதை மனப்பூர்வமாக செய்யவேண்டும்) * என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள். (நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்) ஆண்டவர் கொடுத்த நற்சான்றுகளைப் பார்த்தீர்களா!
அன்பானவர்களே! மரியாள் பெற்ற ஆசீர்வாதங்கள் உங்களுக்கு வேண்டாமா? ஆண்டவருக்கும் அவர் பணிக்கும் உங்களிடம் உள்ளதை கொடுத்து ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறீர்களா? இல்லையென்றால் இன்றே அதை செய்ய முடிவெடுங்கள். ஆண்டவருக்காக கொடுக்க நீங்கள் முன்வரும்போது உங்களது வீடு ஆசீர்வாதத்தினால் நிரம்பும். கொடுப்பது நீங்கள் விரும்பும் பொருளாக இருக்கலாம், நேரமாகவோ அல்லது தாலந்தாகவோ இருக்கலாம். அதை தேவனுக்கென்று மனப்பூர்வமாய்க் கொடுத்துப் பாருங்கள். மேற்கண்ட தேவமனிதர் தன்னையும் தனக்குள்ள அனைத்தையும் கொடுத்தார். சுற்றியுள்ளவர்களோ நீ உன் வாழ்வை வீணாக்கிவிட்டாய் என்றிருப்பர். ஆனால் ஆண்டவரோ அவரை உலகிற்கே நறுமணம் வீசும்படி செய்தார். ஆம் விலைக்கிரயம் வீணல்ல; வெற்றியே!
- Bro. டேவிட் தவமணி
ஜெபக்குறிப்பு;
மோட்சப் பயணப் பத்திரிக்கை உட்பட நமது அனைத்துப் பத்திரிக்கை ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864