By Village Missionary Movement
Tuesday, 16-Jan-2024இன்றைய தியானம்(Tamil) 16.01.2024
விதையாய் கொடுங்கள்
"…உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்;…" - 1 நாளா. 29:9
ஒருநாள் அறிவியல் ஆசிரியர் ஒரு மிளகாயோடு வகுப்பிற்குள் நுழைந்தார். இது எப்படி வந்தது? என மாணவர்களிடம் கேட்டார். மாணவர்கள் மிளகாய்ச் செடியிலிருந்து என்றனர். உடனே ஆசிரியர் செடி எப்படி வந்தது என்றார். விதையிலிருந்து என்றனர். ஆசிரியர் கடவுளின் அதிசயத்தைப் பாருங்கள். ஒரு விதையிலிருந்து எத்தனை காய்கள், ஒவ்வொரு காய்க்குள்ளும் எத்தனை விதைகளை வைத்துள்ளார்! ஒரு விதையிலிருந்து எத்தனை பெருக்கம் பார்த்தீர்களா? என்று அன்றைய பாடங்களை நடத்த துவங்கினார்.
வேதத்திலும் கூட இயேசுவின் வார்த்தைகளை கேட்க வந்தவர்களில் ஒரு சிறுவன் தனக்கென ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்திருந்தான். அவன் தூரப் பார்வையோடு உணவை கொண்டு வந்திருந்தான். இயேசு நீண்ட நேரம் பேசிவிட்டு ஜனங்களை அனுப்ப எண்ணியபோது அவர்கள் பசியால் சோர்ந்து போவார்களே என சீஷர்களிடம் அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்றார். அந்த சிறுவன் தனக்கென்று வைத்திருந்த உணவை சிறு விதையாய் சீஷர்களிடம் கொடுத்தான். கொடுத்ததும் இழந்தது போல் இருந்தது. ஆனால் இயேசு அதைப் பெருகச் செய்து ஐந்தாயிரம் புருஷர்கள், ஸ்திரீகள், பிள்ளைகள் என ஏராளமானவர்கள் சாப்பிட்டனர். மேலும் மீதியும் எடுக்கப்பட்டது. அவனும் திருப்தியாய் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினான். அனைவரும் மகிழ்ந்தனர்.
இதை வாசிக்கும் அன்பரே! ஒருநாள் இயேசுவின் வார்த்தைளைக் கேட்ட சிறுவனே தனக்கென்று வைத்திருந்ததை இயேசுவின் ஊழியத்திற்கு தேவை என்றதும் சிறிதும் யோசிக்காமல் விதைக்க கொடுத்தானென்றால், இன்று நீங்களும் நானும் எத்தனை நாட்களாய், ஆண்டுகளாய் அவர் வார்த்தையை கேட்கிறோம். எழுப்புதலுக்காய் ஜெபிக்கிறோம். ஆனால் ஆத்துமாக்களை சந்திக்கும் ஊழியத்தின் தேவைக்காய் என்ன செய்கிறோம்? சற்று சிந்திப்போம். அந்த சிறுவன் விதைத்ததை போல உங்களின் பங்களிப்பு சிறியதாய் இருக்கலாம். நீங்கள் ஊழியத்திற்கென்று கொடுப்பதை அவர்கள் இயேசுவின் பணிக்கென செலவிடும்போது அவர் பெருகச் செய்வார். நம்மிடம் இருந்தால் நமக்கு மட்டுமே பலன். இயேசு கிறிஸ்துவுக்காய் கொடுக்கும் போது உள்ளமும் மனமும் திருப்தியடையும். ஊழியத்திலும் நம்முடைய வாழ்விலும் பெருக்கம் உண்டாகும். இதுதான் தேவன் தரும் பலன். நித்திய வாழ்விலும் அதை பார்க்கலாம். மத்தேயு 10:42 ல் ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தாலும் பலன் உண்டு என பார்க்கிறோம். எனவே முழு இருதயத்தோடு மனப்பூர்வமாய் கர்த்தருக்கென்று நமக்குள்ளதைக் கொடுப்போம், ஆசீர்வாதம் பெறுவோம்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
நம் பணித்தள ஊழியர்களுக்கு தேவையான நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864