Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09.01.2024
Share:

By Village Missionary Movement

Tuesday, 09-Jan-2024

இன்றைய தியானம்(Tamil) 09.01.2024

 

வார்த்தையாகிய விதை

 

"மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்" - நீதி. 18:21

 

டி. எல் மூடி பிரசிங்கியாரை ஒரு பெரிய நீதிபதியின் மனைவி தன் வீட்டுக்கு அழைத்து, "ஐயா, என் கணவருக்கு சுவிசேஷத்தை சொல்லி இரட்சிப்பிற்குள் வழி நடத்துங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். மூடி பிரசங்கியாருக்கோ மிகவும் படித்த நீதிபதியிடம் தான் எப்படி பேசுவது என்று ஒரே கலக்கம். அதற்காக உபவாசம் இருந்து ஜெபித்தார். பின்பு அந்த வீட்டுக்கு வந்து, "நீதிபதி அவர்களே நீங்கள் இரட்சிக்கப்பட்ட பின் எனக்கு சொல்லி அனுப்புங்கள்" என்று சொல்லிவிட்டு போய்விட்டார். நீதிபதியின் மனைவிக்கோ பெரிய ஏமாற்றம்! முழு சுவிசேஷத்தை அறிவிக்காமல் ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லிவிட்டு போய்விட்டாரே என்று பிரசங்கியாரின் மீது கோபம் வந்தது. ஆனால் நடந்தது என்ன தெரியுமா? பிரசங்கியாரின் வார்த்தைகள் நீதிபதியின் உள்ளத்தில் பெரிய அசைவை கொண்டு வந்தது. அன்றைய தினமே நீதிபதி இரட்சிக்கப்பட்டார். அல்லேலூயா!

  

பிதாவாகிய தேவன் ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்த பூமியிலே தம் வார்த்தைகளினாலே எல்லாவற்றையும் சிருஷ்டித்தார். மிருக ஜீவன்களை சிருஷ்டித்து ஆதாம் அவைகளுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி, அவைகளை அவனிடத்தில் கொண்டு வந்தார் என்று ஆதியாகமம் இரண்டாம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். நம் வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தைகளை தேவன் கவனித்துக் கேட்கிறவராயிருக்கிறார். (மல்கியா 3:16)

 

 இயேசுவினுடைய வாயில் வார்த்தைகள் எவ்வளவு கூர்மையான ஆயுதங்களாக வெளிவந்தன! "இரையாதே அமைதலாயிரு" "லாசருவே வெளியே வா" "எனக்கு சித்தம் உண்டு சுத்தமாகு" "நீ போகலாம் உன் விசுவாசத்தின் படி ஆகக்கடவது" என்ற வார்த்தைகளில் பரிசுத்த ஆவியின் அக்கினி இருந்தது. அவருடைய வார்த்தைகள் அன்பானவைகள். மனதுருக்கமுடையவை, கிருபை பொருந்தினதாயும் இருந்தது. இது அநேகரை ஆறுதல்படுத்துகிறதாயும், காயம் கட்டுகிறதாயும், சுகப்படுத்துகிறதாயும் இருந்தது.  

  

பிரியமானவர்களே! வயல்வெளியில் விதைகளை விதைக்கும்போது விதைக்குள்ளே இருக்கிற ஜீவன் தன்னைப் போலவே இன்னும் சில விதைகளைத் தரக்கூடிய மரங்களையோ, செடிகளையோ உருவாக்கி கனிகளைக் கொடுக்கக் கூடியதாய் வளருகிறது. மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். நாம் பேசும் வார்த்தைகளில் மூலம் அநேகரை இயேசுவுக்காய் ஆதாயப்படுத்திக் கொள்ள முடியும். எனவே எதிர்மறையான காரியங்களை சிந்திப்பதை, பேசுவதைத் தவிர்த்து நேர்மறையான காரியங்களை விசுவாசத்தோடு அறிக்கை செய்வோம். நம்முடைய நாவை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்வோம். "ஆண்டவரே, நான் பேசினால் அந்த வார்த்தைகள் கல்வாரி அன்பினால் நிறைந்த வார்த்தைகளாக இருக்க வேண்டும். உம்முடைய சித்தத்தின்படியே பேச வேண்டும்" என்பது நமது ஒவ்வொரு நாளும் ஜெபமாய் மாறட்டும். இவ்வாறாக வார்த்தை என்னும் விதைகளை விதைத்து ஆத்துமாக்களை அறுவடை செய்ய ஆயத்தமாவோம்.

- Mrs. ஜெபக்கனி சேகர்

 

ஜெபக்குறிப்பு: 

கண்மணியே கேள் டிவி நிகழ்ச்சி மூலம் சந்திக்கப்படும் சிறுபிள்ளைகளுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al