By Village Missionary Movement
Tuesday, 02-Jan-2024இன்றைய தியானம்(Tamil) 02.01.2024
புதிய ஆண்டு
"…ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்…" - 2 கொரி. 5:17
புதுமண வாழ்க்கை, குழந்தை பிறப்பு, புதிய வீடு, புதிய வாகனம், புதிய நகைகள், புத்தாடைகள் போன்ற வாழ்க்கையின் புதிய காரியங்களும், பொருட்களும் நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கும். ஒவ்வொரு புத்தாண்டும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இந்த புதிய ஆண்டில் நம்மை குறித்து கர்த்தரின் மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும் என்ன என்பதே இன்றைய தியானம்.
ஒவ்வொரு மனிதனின் பாவங்களும் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு அவன் ஆத்மா இரட்சிப்படைய வேண்டும். இதுவே மறுபிறப்பு. மறுபிறப்பின் மூலம் பழைய பாவ வாழ்க்கை ஒழிந்து, ஒவ்வொருவரும் புதுசிருஷ்டியாக வேண்டும் என்பதை தேவனின் எதிர்பார்ப்பு. நீங்கள் ஒரு புது சிருஷ்டியாக புத்தாண்டிற்குள் நுழைய வேண்டும். இப்பொழுதே நீங்கள் மறுபிறப்படைந்து புதுசிருஷ்டியாக மாறிவிடுங்கள். ஏற்கனவே மறுபிறப்படைந்தவர்கள், கடந்த நாட்களில் ஏற்பட்ட ஆவிக்குரிய தோல்விகளை கர்த்தரிடத்தில் ஒப்புவித்து நம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். எப்படி? கர்த்தருடைய பாதத்தில் ஒரு சில நாட்கள் காத்திருந்து, நம்மைப் பரிசுத்தப்படுத்தி, புதிய அபிஷேகம், புதிய வல்லமையை பெற்றுக்கொள்ள வேண்டும். வேத வாசிப்பு, ஜெபம், ஆராதனை, ஊழியங்கள் ஆகியவற்றில் காணப்பட்ட மந்த நிலையை ஒழிக்கத் தீர்மானிப்போம். இப்படியாக கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு பழைய பாவங்கள், தோல்விகள் எல்லாம் ஒழிந்து, எல்லாம் புதிதாகிவிட்டன. முந்தினவைகளை நினைக்க, சிந்திக்க வேண்டாம். கர்த்தர் எல்லார் வாழ்க்கையிலும் புதிய காரியங்களைச் செய்வார். உலக காரியங்களையும் பொறுப்பேற்றுக் கொள்வார்.
புத்தாண்டில் புதிய வாக்குத்தத்தங்களைப் பெற்று அவற்றின்படி ஆசீர்வதிக்கப்பட ஒவ்வொருவரும் விரும்புவதில் தவறில்லை. வாக்குத்தத்தங்களிலேயே முக்கியமானது நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே, அவர் நமக்கு செய்த வாக்குத்தத்தம்! ஒவ்வொரு ஆண்டின் துவக்கமும் நம் வாழ்க்கைப் பயணத்தின் முடிவு நெருங்கிக் கொண்டிருப்பதை அறிவிக்கிறது. எனவே, கர்த்தர் நமக்கு கொடுக்கும் கிருபையின் காலங்களில் கர்த்தர் கொடுத்த இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக் கொள்ள தீவிரம் காட்டுவோம். நமக்கு நெருங்கியவர்கள், நம் தேசத்தார், உலகத்தார் இந்த வாக்குத்தத்தின்படி ஆசீர்வதிக்கப்பட ஜெபிக்கவும், முயற்சி எடுக்கவும் தீவிரம் காட்டுவோம். எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
பத்தாயிரம் கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும் திட்டம் மூலம் சந்திக்கப்பட்ட கிராமங்களில் நடைபெறும் பின்தொடர் பணிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864