By Village Missionary Movement
Friday, 02-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 02-04-2021
வெற்றியின் சின்னம்
“நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக;…” - கலாத்தியர் 6:14
கி.பி.312ல் ரோமப் பேரரசன் கான்ஸ்டன்டைன் என்பவருக்கு விரோதமாக மாக்ஸனிடியஸ் என்ற அரசன் போர்த்தொடுத்து வந்தான். அச்சமயம் மிகவும் கலக்கமுற்றிருந்த கான்ஸ்டன்டைன் தன் சொப்பனத்தில் ஒளிமயமான சிலுவை ஒன்றினையும் அதன் அருகில் “இந்த அடையாளத்தினால் நீ வெற்றி பெறுவாய்” என்ற வாசகத்தையும் தரிசித்து, உற்சாகங்கொண்டு விழித்தெழுந்தான். அந்த இரவிலேயே போர்வீரர்கள் அனைவரும் தங்கள் கேடகத்தில் சிலுவை அடையாளத்தை வரைந்து கொண்டு யுத்தத்திற்கு ஆயத்தப்படும்படியாகக் கட்டளையிட்டான். இறுதியில் ரோமப்படையினர் மாக்ஸனிடியஸின் படையை முறியடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றனர். சிலுவை அடையாளத்தின் மூலம் வெற்றி பெற்ற கான்ஸ்டன்டைன் அந்நாள் முதற்கொண்டு கிறிஸ்துவை பின்பற்றியதாக சரித்திரம் சொல்லுகிறது. அவரைப் பின்பற்றிய அநேகர், கிறிஸ்துவையும் பின்பற்றத் தொடங்கினர்.
இன்று, இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தை உலகமனைத்தும் உள்ள சபை நினைவுகூருகிறது. சாபத்தின் சின்னமாய் காணப்பட்ட சிலுவை இயேசுகிறிஸ்து மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்ததின் நிமித்தம் அது வெற்றியின் சின்னமாக மாறியது. அப்போஸ்தலனாகிய பவுலும் கலாத்திய சபைக்கு எழுதும்போது “நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக” என்று கூறினார். ஆம், நாம் மேன்மைபாராட்ட வேண்டிய சின்னம் சிலுவை, நம் வாழ்வின் வெற்றியின் சின்னம் சிலுவை. சிலுவையின் நிழல் நாம் இளைப்பாறும் இடம். ஆனால் ஒரு மேஜிக் சின்னமல்ல சிலுவை. அதன் மேன்மையை, மகிமையை, சிலுவை மரணத்தின் மூலம் கிடைத்த விடுதலையை உணர்ந்தோருக்கு அது வெற்றியின் சின்னமே!
இதை வாசித்துக் கொண்டிருக்கிற நீங்கள், அனுதினமும் உங்களுடைய சிலுவையை சுமந்து ஆண்டவரை பின்பற்றுகிறவரா? சிலுவையின் உபதேசத்திற்கு செவிசாய்த்து, தேவபெலனைப் பெற்றுக் கொள்ளுகிறவரா? அப்படியென்றால் உங்கள் வாழ்வு மறுமையில் மட்டுமல்ல இம்மையிலும் ஜெயமாயிருக்கும். அவ்வப்போது சில சோர்வுகள், கலக்கங்கள், பயங்கள் வரலாம். ஆனால் நம் இரட்சகர் சிலுவையில் நம்முடைய பாவங்களுக்காக, நோய்களுக்காக, சாபங்களுக்காக வெற்றி சிறந்ததை நினைத்து நாம் தைரியம் கொள்ள முடியும். சிலுவையில் சாத்தானின் தலையை நசுக்கி நமக்கு சம்பாதித்துக் கொடுத்த ஜெயத்தை சுதந்தரித்துக் கொள்வோம். வெற்றியாய் வாழ்வோம்.
- Mrs. ஜெபா டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:
புதியதாக இணைந்துள்ள மிஷனெரிகளை தேவன் ஊழியத்தில் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250