By Village Missionary Movement
Saturday, 30-Dec-2023இன்றைய தியானம்(Tamil) 30.12.2023
நன்றியுள்ள இருதயம்
"…நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்" - கொலோசெயர் 3:15
வியட்நாமில் நடந்த போரில், ஒரு இராணுவத்தலைவன் தன் கீழ் வேலை பார்த்த ஒரு போர் வீரனைக் காப்பாற்ற முயற்சித்ததினிமித்தம் அவர் காயப்பட்டு, அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது. அதைக் குறித்து அவருடைய பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் அவரது நினைவாக ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அந்த கூட்டத்திற்கு அந்த போர் வீரனையும் அழைத்திருந்தார்கள். அவன் மிகவும் தாமதமாக நன்கு குடித்து விட்டு வந்து, அங்கிருந்த உணவுப் பொருட்களை அநாகரீகமாக சாப்பிட்டதுமன்றி தன்னை காப்பாற்றிய அந்த தலைவனுக்கு தன் சார்பாக ஒரு நன்றி கூடத் தெரிவிக்கவுமில்லை. அது மட்டுமல்ல சாப்பிட்டு முடித்தவுடன் தன்னை அழைத்திருந்த அந்த குடும்பத்திற்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான். அவன் போனவுடனே அந்த தலைவனின் தாயார் கதறி அழுது "இந்த நன்றியில்லாத மனிதனுக்காகவா என் மகன் தன் உயிரைக் கொடுத்தான்" என்று கதறினார்கள்.
இது போலவே வேதத்திலும் நன்றியில்லாத மனிதர்களைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. இரட்சகராகிய இயேசு கிறிஸ்து ஒரு கிராமத்தில் பிரவேசித்த போது குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப் பேர் அவருக்கு எதிராக வந்து தூரத்திலே நின்று "எங்களுக்கு இரங்கும்" என்று சத்தமிட்டார்கள். இயேசு அந்த பத்து பேருக்கும் சுகம் கொடுத்தார். தாங்கள் சுகமானதை ஆசாரியனிடத்தில் காண்பித்த அவர்களில் ஒருவர் மாத்திரமே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஸ்தோத்திரம் செலுத்தினான். அப்பொழுது இயேசு சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா! மற்ற ஒன்பது பேர் எங்கே? என்றார். ஆம், ஆண்டவர் நம்மிடம் நன்றியுள்ள இருதயத்தை எதிர்பார்க்கிறார்.
பிரியமானவர்களே! வருட இறுதியில் வந்திருக்கிற நாம் எத்தனை பேர் நன்றியுள்ள இருதயத்தோடு இருக்கிறோம்? இந்த வருடத்தின் துவக்கத்தில் எத்தனை பேர் நம்முடன் ஓட்டத்தை துவங்கினார்கள். இன்று அநேகர் உயிரோடு இல்லை. ஆண்டவர் இன்று வரை, இந்த நிமிஷம் வரை நம்மை ஜீவனோடு வைத்ததை எண்ணி அவருக்கு நன்றி செலுத்தினதுண்டா? விடுமுறை நாட்களில் குடும்பமாக சுற்றுலா செல்வதற்கு திட்டமிடும் நாம் குடும்பமாக அமர்ந்து, நேரமெடுத்து அவருக்கு நன்றி செலுத்த திட்டமிடுவோமா? எத்தனையோ ஆபத்துகள், விபத்துகள், குறைச்சல்கள், வியாதிகளினின்று நம்மை விடுவித்து, இந்த நிமிடம் வரை பாதுகாத்துக் கொண்டிருக்கும் இயேசு மகாராஜனுக்கு நன்றி செலுத்திக் கொண்டேயிருப்போம். அல்லேலூயா!
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864