By Village Missionary Movement
Friday, 22-Dec-2023இன்றைய தியானம்(Tamil) 22.12.2023
அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்
"அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:" - லூக்கா 2:13
ராணி தன் வீட்டில் குடில், கிறிஸ்துமஸ் மரம் வைத்து அவர்கள் வீட்டில் வண்டி நிறுத்தும் இடத்தில் அலங்கரித்து வைத்திருந்தாள். அவ்வழியே செல்பவர்கள், வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் அதை நின்று பார்ப்பார்கள் அதை ராணி பார்த்தால், உடனே கேட்டைத் திறந்து அவர்களை உள்ளே அழைத்து அவர்களுக்கு இயேசுவின் அன்பை எடுத்துக் கூறி இனிப்பு கொடுத்து அனுப்புவாள். அதேபோல் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் அன்றும் இரண்டு பேருக்காகிலும் ஞானஸ்நானம் கொடுக்கும்படி அவ்வருடம் முழுவதும் ஆண்டவருக்குள் வழிநடத்தி அவர்களை ஆலயத்திற்கு அழைத்து வருவாள். இதையெல்லாம் கண்ட அவனது தோழி தாரணி ஆச்சரியத்தோடு அவளைப் பார்க்க, உடனே ராணி அவளிடம் கிறிஸ்து பிறந்த போது பரலோகம் மகிழ்ந்து, அந்த செய்தியை பரலோக சேனை உலகிற்கு அறிவித்தனர். இன்று அநேகர் உள்ளங்களில் இயேசு பிறப்பதால் பரலோகம் மகிழ வேண்டும் அதற்கான சிறிய முயற்சிதான் இது என்றாள்.
இயேசுகிறிஸ்துவின் முதல் வருகையின் போது தாழ்மையின் ரூபமாய் மாட்டுத்தொழுவில் பிறந்த இயேசு பாலன் செய்தியை அறிவிக்க பரலோக சேனையே மகிழ்ந்தது! பரம சேனையின் மகிழ்ச்சி மேய்ப்பர்களை பற்றிப் பிடித்தது. அவர்கள் பெத்லகேம் சென்று கண்டு தரிசித்து, அறிவித்து மகிழ்ந்தனர். கேட்ட யாவரும் ஆச்சரியப்பட்டனர். மேலும் பலர் சென்று கண்டிருக்கவும் செய்திருப்பர். அதே போல் நட்சத்திரம் சாஸ்திரிகளை அழைத்து வந்தது அவர்கள் தங்கள் ஞானம் அந்தஸ்து, பெருமை எல்லாவற்றையும் விட்டு பணிந்து சென்றனர்.
நாம் பெற்ற தீபத்தை நம் சபைக்குள் வைத்து அமர்ந்து விட்டோமா? அல்லது அணைத்து விட்டோமா? சிந்திப்போம்! ஏனெனில் இன்னும் கிறிஸ்துவை அறியாதவர்கள் என்னை சுற்றி செல்லுமிடங்களில் உள்ளனரே. கிறிஸ்துமஸ் என நான் மட்டும் கொண்டாடினால் பரலோகம் மகிழாதே. கொண்டாட்டம் மட்டுமிருந்தால் அன்றோடு மகிழ்ச்சி போய்விடும். பின் துக்கமும், துன்பமும் தான் தொடரும். பரலோக மகிழ்ச்சி இருக்காது.
பிரியமானவர்களே, பாவ, சாப இருளில் வாழும் ஜனங்களுக்கு கிறிஸ்து என்னும் ஒளியேற்றி வைப்போம். இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்ற ஏசாயா 9:2 ம் வசனத்தின்படி பரலோக மகிழ்ச்சி என்ற தீபத்தை ஏற்றி மகிழ்வோம். இதுதான் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ். இந்த கிறிஸ்துமஸ்-ஐ அர்த்தமுள்ளதாய் கொண்டாடி மகிழ்வோம்.
- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
நமது தோழமை ஊழியர்களுக்காக மற்றும் அவர்கள் மூலம் சந்திக்கப்டும் கிராமங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864