By Village Missionary Movement
Thursday, 01-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 01-04-2021
உகந்த உபவாசமா?
“...இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.” - மத்தேயு 23:23
நாம் இப்போது தபசு காலத்தின் கடைசி நாட்களுக்குள் வந்திருக்கிறோம். இந்த நாட்களை ஆவிக்குரிய வசந்த நாட்கள் என்றே கூறலாம். சபையில் அநேக ஆவிக்குரிய கூட்டங்கள், ஏகப்பட்ட செய்திகள், மாம்சத்தை ஒடுக்கி செய்த உபவாசங்கள்.... இவை எல்லாம் மிகவும் தேவையானது, மிகவும் நல்லதே! அதே வேளையில் ஒரு காரியத்தை சிந்திக்க வேண்டும். இந்நாட்களில் தேவனுக்கும் உங்களுக்கும் உள்ள உறவு பலப்பட்டிருக்கிறதா? அநேக வேளையிலே நாம் வெளிப்புற சடங்காச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உள்ளான சுத்திகரிப்பிற்கு அதிக கவனம் செலுத்தாமல் விட்டு விடுகிறோம். நாம் செய்த உபவாசங்கள் தேவனுக்கு உகந்ததாய், தேவன் விரும்புகிறபடி, வேத வசனத்தின்படி இருந்ததா என்று கீழ்க்கண்ட கேள்விகள் மூலம் நம்மை நாமே நிதானித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம்.
1. நம் வாழ்விலுள்ள அக்கிரமத்தின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டிருக்கிறதா? அதாவது நமது பாவங்கள் மீறுதல்களை விட்டு மனந்திரும்பி இருக்கிறோமா? பிறரது பாவபாரம் நீங்க பிரயாசப்பட்டோமா?
(ஏசாயா 58:6)
2. ஏதோ ஒரு பாவக் காரியத்தில் அடிமைப்பட்டு சிக்கிக் கிடந்த ஒருவரையாவது விடுதலையாக்க இந்த 40 நாட்களில் முயற்சித்தேனா?
(ஏசாயா 58:6)
3. நாம் எத்தனை பேருக்கு இயேசுவைப் பற்றி சொன்னோம்? வியாதியினால், வேதனையினால் நெருக்கப்படுகிறவர்களின் பாரம் நீங்க உதவி செய்தேனா? (ஏசாயா 58:6)
4. பசியுள்ளவர்களுக்கு ஆகாரம் கொடுத்தேனா? திக்கற்ற பிள்ளைகளை கரிசனையோடு விசாரித்து உதவிகள் செய்தேனா? (ஏசாயா 58:7)
5. ஈஸ்டர் பண்டிகைக்காக நமக்கு ஆடைகள் எடுத்தோமே, யாருக்காவது வஸ்திரம் கொடுத்தோமா? (ஏசாயா 58:7)
6. நம் குடும்பத்திலுள்ளவர்கள் உடன்பிறந்தோர் கஷ்டப்படும்போது, அவர்களுக்கு உதவிகள் தேவைப்படும் போது, கண்டும் காணாமல் பாராமுகமாய் இருந்தோமா? (ஏசாயா 58:7)
7. நம் உபவாசம் அந்தரங்கத்தில் பார்க்கிற பிதாவுக்கு உகந்ததாய் இருந்ததா அல்லது மனுஷர் நம்மை மெச்சிக்கொள்ளும்படி, அவர்கள் காணும்படி முகவாடலாய் இருந்ததா? (மத்தேயு 6:17) சிந்தித்துப்பார்ப்போம்.
அன்பானவர்களே! நம் உபவாச நாட்கள் எப்படி இருந்தது? நம்மை திருப்தி செய்வதற்காக உபவாசித்தோமா அல்லது தேவனுக்கு உகந்த உபவாசமாயிருந்ததா? இல்லையென்றால் இன்றே மனம் வருந்தி ஜெபிப்போம். அவரோடு கூட நம் சுயத்தை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுப்போம். நாம் அவரோடு மரித்தோமானால், அவரோடு எழுந்திருப்போம். அல்லேலூயா.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறுகிற ஊழியங்களில் தேவன் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ண ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250