By Village Missionary Movement
Saturday, 09-Dec-2023இன்றைய தியானம்(Tamil) 09.12.2023
நம்முடன் இருக்கிறவர் இயேசு
"…இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்" - மத்தேயு 1:23
கர்த்தர் நம்மோடு இருப்பதுடன், நம்மில் வாசம் செய்கிறவர், நம்மை வழி நடத்துகிறவர், என்றென்றைக்கும் நம்மை விட்டு விலகாதிருக்கிறவர். ஆம், "இம்மானுவேல்" என்ற பெயருக்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தம். யோவான் தனது சுவிசேஷத்தில் "ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்" என தீர்க்கமாக எழுதியுள்ளார்.
இயேசு என்ற பெயருக்கு எபிரெய மொழியில் யெகோவா அல்லது யெஷீவா என்றும் கிரேக்க மொழியாக்கத்தில் "இரட்சிக்கிறார்" எனவும் பொருள்படும். பாவங்கள், நோய்கள், ஆபத்துகள், மனக்கலக்கங்கள், போராட்டங்கள், வறுமை, நரகம் போன்றவற்றிலிருந்து காப்பற்றுவதையே இது குறிக்கிறது. மனிதன் தன்னைத்தான் இரட்சித்துக் கொள்ள முடியாது. நம் பாவசுபாவங்களை மாற்றி மறுரூப சாயலுக்கு தகுதியாக்கி நித்திய ஜீவனைத் தருபவர் இயேசு மட்டுமே. அவருக்கு நம்முடன் வாசம் செய்வதே விருப்பம்.
ஏதேன் தோட்டத்தில் கர்த்தராகிய தேவன் ஆதாம், ஏவாளோடு உலாவினதை வேதாகமத்தில் அறிவோம். ஆனால் அவர்களோ பாவத்தினால் தேவனை விட்டுப் பிரிந்து, குற்ற உணர்வு, பயம், வெட்கத்தினால் தங்களை ஒளித்துக் கொண்டார்கள். இன்றும் நம்மை தொடர்ந்து தேவனோடு சஞ்சரிக்க விடாமலும், தேவன் நம்மோடிருக்க முடியாமல் ஆக்குவதும் நம் பாவங்களே!
நம்மில் காணப்படும் பாவத்தடைகளை அகற்றி மீண்டும் உறவைப் புதுப்பித்துக் கொள்ள, தேவனிடம் நெருங்கி வாழ, இயேசு சிலுவையில் சிந்தின இரத்தமும், பாவ மன்னிப்பின் நிச்சயமும் நமக்குண்டு. பாவ அறிக்கை செய்து மன்னிப்பு பெற்று இரட்சிப்படைந்தவர்களுக்கு புது அனுபவம் உண்டாகும். ஏதேனின் அனுபவத்தை நாம் பெறலாம். "இதோ மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள்; தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். (வெளிப்படுத்தல் 21:3) என்ன ஒரு அருமையான வாக்குத்தத்தம்!
எனக்கன்பானவர்களே, நம்மை நாமே ஆராய்ந்து இம்மானுவேலின் இரத்தத்தால் கழுவப்பட்டு தேவனோடு வாழ்வோம். தேவன் நம்மோடிருக்கிறார். ஆமென்!
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் கட்டப்பட உள்ள புதிய பள்ளிக்கூடத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864