By Village Missionary Movement
Monday, 06-Nov-2023இன்றைய தியானம்(Tamil) 06.11.2023
காணாமற்போன ஆடு
"நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காய் தன் ஜீவனைக் கொடுக்கிறான்" - யோவான் 10:11
மேய்ப்பன் ஒருவன் மந்தையை மேய்க்கும் படியாய் தன் ஆட்டு மந்தையை மலை அடிவாரம் நோக்கி நடத்தி சென்றான். மந்தையில் குறும்புக்கார ஆடு ஒன்று மேய்ச்சலின் போது தன் கண்களை ஏறிட்டு பார்த்தது. சற்று தொலைவில் பச்சைப்பசேல் என புல்வெளியைக் கண்டது. ஆசை மேலிடவே ஆடு மேய்ப்பனின் கண்களுக்கு தப்பி சற்று தொலைவில் சென்றது. இன்னும் கொஞ்சம் தூரம் இன்னும் கொஞ்சம் தூரம் என மேய்ப்பனின் கண்களுக்கு மறைவாய் காணாமலேயே சென்று விட்டது. சற்று இருட்டவே வழிதப்பிய ஆட்டிற்கு பயம் கவ்வியது. கொடிய மிருகங்களின் சத்தம் வேறு. பீதியை கிளப்ப, பரிதாபமாக நின்றிருந்தது. அங்கு கிடையில் மந்தைகளை சேர்த்த மேய்ப்பன் காணாமல் போன ஆட்டை தேடி வந்தான். முட்களால் குத்தப்பட்டு பரிதாபமாக நின்றிருந்த ஆட்டை கண்டான். சந்தோஷமாக அணைத்து தன் தோளின் மீது போட்டுக் கொண்டு மந்தையை நோக்கி நடந்தான்.
வேதத்திலும் கூட தன் பார்வைக்கு அழகாய் கண்ட சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு அருகேயுள்ள யோர்தானை நோக்கி, ஆபிரகாமை விட்டு பிரிந்து சென்றார் லோத்து. அப்பட்டணத்தின் அக்கிரமம் பெருகி தேவ சமூகத்தை எட்டவே அதை அழிக்கும்படியாய் வந்தனர் தேவதூதர்கள்! அதில் லோத்தை தப்பச் செய்து அனுப்பிவிடவே, அவர் மனைவியோ திரும்பி பார்த்து உப்புத் தூண் ஆகிறாள். மகள்கள் இருவரும் பாவம் செய்தார்கள். மோவாப், அம்மோன் என இரு சந்ததிகள் அவர்களிடமிருந்து தோன்றிற்று. தப்பிப்போன அந்த தலைமுறையினரை மீட்க மோவாபிய பெண்ணாகிய ரூத்தைக் கொண்டு மறுபடியும் தன்னுடைய மீட்பின் திட்டத்தை ஆரம்பித்தார் தேவன். ஆம், அவர் ஒருவரையும் புறம்பே தள்ளுகிறவர் அல்லவே!
பிரியமானவர்களே, உலகத்தின் இச்சைகளால் சிக்கி, பாவத்தில் உழன்று கொண்டிருந்த நம்மை மீட்க இயேசு கிறிஸ்து நமக்காய் வந்தாரே. காணாமல் போன ஆடுகளாகிய நம்மை மீட்டுக் கொள்ளும்படி தன் கடைசி சொட்டு இரத்தத்தையும் நமக்காக சிந்தினாரே! முட்கிரீடம் சூடப்பட்டவராய், காயங்கள் ஏற்றவராய், அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டாரே. நம் மேய்ப்பன் ஆடுகளுக்காக ஜீவனை கொடுக்கும் நல்ல மேய்ப்பன் அல்லவா! இன்னமும் இயேசுவின் மந்தையில் சேராமல் வழிதப்பிய ஆடுகளா நீங்கள்? நல்ல மேய்ப்பனாய் இன்றும் கண்ணீரோடு உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். தேவன் இன்னும் உங்களை நேசிக்கிறார். உங்கள் பாவங்களை மறந்துவிட்டார். ஆனால் உங்களை மறக்கவே மாட்டார். அவரது தோளில் சுமக்க ஆயத்தமாயுள்ளார்.
- Sis. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
ஆமென் வில்லேஜ் டிவி சேட்டிலைட் சேனலாக மாற்றப்பட எடுக்கும் முயற்சிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864