By Village Missionary Movement
Saturday, 04-Nov-2023இன்றைய தியானம்(Tamil) 04.11.2023
தேவ பிரசன்னம்
". . .நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே" - எபிரெயர் 13:5
வாழ்க்கையின் சில சூழ்நிலைகளில் தேவன் நம்மோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்குறி தேவ பிள்ளைகளுக்கு வருவது உண்டு. "நான் உன்னை விட்டு விலகுவதில்லை" என்ற வாக்கு மாறாத தேவனுடைய பிரசன்னத்தை ஏன் நம்மால் எப்பொழுதும் உணர முடியாமற் போகிறது என்பதன் காரணங்களை வேதத்தின் மூலமாக கற்றுக் கொள்வோம்.
துக்கம்: இயேசுவின் மரணத்தினால் மிகுந்த துக்கமடைந்திருந்த மகதலேனா மரியாவால் இயேசு அவளுக்கு தரிசனமானபோது அவரை அறிய முடியவில்லை. எம்மாவூருக்கு நடந்து சென்ற இரு சீஷரோடு இயேசுவும் நடந்து சென்றார். அவர்களும் துக்கத்தோடு இருந்ததால் இயேசுவின் பிரசன்னத்தை உணரவில்லை. காரணம் இவர்கள் எல்லோருமே இயேசுவின் பாடுகள், உயிர்த்தெழுதல் குறித்த வாக்கியங்களை அறியவில்லை. சகலவித ஆறுதலின் தேவனை பற்றிய வேதவாக்கியங்கள் நமது துக்க, துயர சமயங்களிலும் நம்மை ஆற்றும் தேற்றும். ஆகவே அவற்றை அறிந்திருப்பது எவ்வளவு அவசியம்!
பயம்: பயம் ஓர் எதிர்மறை உணர்ச்சி. விசுவாசத்தை அணைத்துவிடும். ஐந்து அப்பம் இரண்டு மீன் கொண்டு ஐந்தாயிரம் பேரை போஷித்த அற்புதத்திற்குப் பின், தமக்கு முன் அக்கரைக்குப் போகும்படி இயேசு சொல்லியிருந்தார். கடல் கொந்தளித்து படகு அமிழும் சூழ்நிலையில் இயேசு கடல் மேல் நடந்து அவர்களிடம் வந்த போது அவரைக் கண்டு பயந்து அலறினார்கள். அவரது பிரசன்னத்தை அறியவில்லை. அவர் சொல்லி, மேற்கொண்ட பிரயாணத்தில் சேதம் வராது என்ற விசுவாசம் அவர்களுக்கு இல்லை. அவர் முன் செய்த அற்புதமும் அவர்கள் நினைவிற்கு வரவில்லை. நான் பயப்படும் நாளில் கர்த்தரை நம்புவேன் என்று தாவீது கூறுகிறார். நாம் கர்த்தரையும் அவரது வாக்குத்தத்தங்களையும் நம்புவோமாக!
பின்மாற்றம்: பேதுருவும் சில சீஷரும் பின்மாற்றமடைந்து திபேரியா கடலில் மீன்பிடிக்க சென்ற போது இராமுழுதும் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை. விடியற்காலத்தில் கரையில் நின்ற இயேசுவை அவர்களால் அறியமுடியவில்லை. ஆனால் இயேசு 153 பெரிய மீன்களைப் பிடிக்கும்படி அற்புதம் செய்து அவருடைய அன்பை வெளிப்படுத்திய போது அவரை அறிந்தார்கள். நாமும் கூட பின்மாற்ற நிலையில் இருந்தாலும் அநேக காரியங்கள் மூலம் இயேசுவின் அன்பை உணரச் செய்கிறார். அப்பொழுது அவருடைய பிரசன்னத்தை உணர்ந்து அவரிடம் திரும்புவோமாக.
எக்காலமும் மாறாத தேவன் நம்மை விட்டு ஒருக்காலும் விலகுவதுமில்லை! நம்மைக் கைவிடுவதுமில்லை! அல்லேலூயா!
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
சுவிசேஷ முகாமின் மூலம் சந்திக்கப்படும் சிறுவர்கள் மற்றும் வாலிபர்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864