By Village Missionary Movement
Friday, 26-Mar-2021இன்றைய தியானம்(Tamil) 26-03-2021
ஜெபம் செய்திடுவோம்
“நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.” – யோவான் 15:7
எழுப்புதல் வீரரான ஜான் வெஸ்லியின் காலத்தில் அத்தேசத்தில் தேவ பக்தியுள்ள சகோதரிகள் சிலர் ஒன்று கூடி ஊருக்கு வெளியிலிருந்து ஒரு புதரின் அருகே வழக்கமாய் ஜெபித்து வந்தனர். அதுவே அவர்களுக்குத் தேவனை நோக்கி வழக்கமாய் ஜெபிக்கும் ஜெப ஸ்தலமாய் மாறியது. அந்த இடத்தில் தெய்வீக பிரசன்னமும், மகிமையும் அளவில்லாமல் இருப்பதாகவும், வித்தியாசமான ஒரு பரலோக அனுபவத்திற்கு தாங்கள் நடத்தப்படுவதாகவும், வெஸ்லி அந்த சகோதரிகள் மூலமாக அநேக சாட்சிகளைக் கேள்விப்பட்டார். இருப்பினும் அவர் அவைகளையெல்லாம் நம்பவில்லை. பின்னாட்களில் அவர் தேவனால் தொடப்பட்டு இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற பின்பு அவரது கால்கள் அவரை அறியாமலேயே அந்த ஜெப ஸ்தலத்தை நோக்கி விரைந்தது. அவ்விடத்தில் பல ஆண்டுகளாக பல தேவ பிள்ளைகள் தொடர்ந்து ஜெபித்து வந்ததன் விளைவாக தெய்வீக பிரசன்னம் நிரம்பியிருந்ததால் அந்த பிசன்னத்தை அவரால் வெகு விரைவில் நன்கு உணர முடிந்தது.
தாவீது ராஜா கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதற்கென்று ஒரு பிரத்தியேகமான இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்த இடம்தான் தேவதூதன் தனக்குமுன் தரிசனமான இடம். ஆகவே அந்த இடத்தையே தாவீது தேவனுக்கு ஆலயம் கட்டுவதற்கென்று தெரிவு செய்து பிரதிஷ்டை பண்ணினார். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு பிதாவை நோக்கி தனித்து ஜெபிப்பதற்கு ஓர் இடமும், நேரமும் ஆயத்தமாய் இருந்தது. அவர் ஒலிவ மலையிலுள்ள கெத்செமனே தோட்டம் மற்றும் வனாந்தரமான ஒரு இடத்தை ஜெப ஸ்தலமாகத் தெரிவு செய்திருந்தார். இங்கு தனிமையாகவும், சீஷர்களோடும் அதிகாலை மற்றும் இரவு வேளையில் ஜெபித்தார். அவ்வேளையில் பிதாவின் சித்தத்தை முற்றிலும் நிறைவேற்றி முடிப்பதற்கு வேண்டிய தேவ பெலத்தையும், தைரியத்தையும் பெற்றுக் கொண்டார்.
இதை வாசிக்கும் நண்பர்களே! நீங்களும் உங்கள் வாழ்க்கையில் ஜெபிப்பதற்கென்று ஒரு இடத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள். இடத்தில் வல்லமையுள்ளது என்று சொல்லவில்லை, வழக்கமாய் ஜெபிக்கும் இடத்திலே, தேவன் நம்மை சந்திக்கும்படி வந்துவிடுகிறார். ஆகவே தேவபிரசன்னமும், அவரது மகிமையும் பலமாய் காணப்படும். காந்தம் இருக்குமிடத்தில் அதைச் சுற்றி காந்த ஈர்ப்பும் சக்தியும் இருக்கும். வாசனை மலர்கள் விற்பனை செய்யப்படும் இடத்தில் மலர்கள் விற்பனையான பின்பும் கூட வாசனை தொடர்ந்து வீசிக்கொண்டேயிருக்கும். அதே போன்று தேவ பிள்ளைகள் கூடி ஜெபிக்குமிடத்தில் கர்த்தருடைய தெய்வீக பிரசன்னமும், மகிமையும் அளவில்லாமல் இறங்கி வந்து கொண்டே இருக்கும். அல்லேலூயா!
- M. ஜான்
ஜெபக்குறிப்பு:
மோட்சப் பயணம் இதழ் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் அச்சடிக்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250