By Village Missionary Movement
Wednesday, 18-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 18.10.2023
கேள்வி கேட்காத கீழ்ப்படிதல்
"…தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்." - ஆதியாகமம் 6:22
செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் ஒன்று செய்திருந்தார். விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர். இரண்டுநாள் அவர் சொன்ன வேலையை செய்தனர். பின்பு ஒவ்வொருவராக முறுமுறுக்கத் தொடங்கினர். நான் எவ்வளவு படித்திருக்கிறேன்? என் திறமை என்ன? எனக்கு இந்த வேலை சரிவராது என்று சொல்லி கிளம்பி விட்டார்கள். ஆனால் ஒரு வாலிபன் மட்டும் தொடர்ந்து வேலையை செய்து கொண்டிருந்தான். அந்த செல்வந்தர் அங்கு கிடந்த ஜல்லி கற்களை எடுத்து சற்று தொலைவில் போய் கொட்டச் சொன்னார். மறுநாள் அதை அள்ளி ஏற்கனவே இருந்த இடத்திற்கு வந்து போடச் சொன்னார். அப்படியே ஒரு வாரம் செய்யச் சொன்னார். அந்த வாலிபனுக்கு ஒரு வாரத்திற்கான கூலியையும் கொடுத்தார். மறுநாள் அவர் சற்றும் அந்த வாலிபன் வேலைக்கு வருவானென்று எதிர்பார்க்கவில்லை. அந்த வாலிபனோ சொன்ன நேரத்திற்கு வேலைக்கு வந்துவிட்டான். ஏன் எதற்கு என்று எந்த கேள்வியுமின்றி எஜமானின் கட்டளைக்கு அப்படியே உண்மையாய் கீழ்ப்படிந்த வாலிபனுக்கு அவன் படிப்பிற்கும், திறமைக்கும் ஏற்ற உயர்ந்த வேலையை கொடுத்தார்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே அறைகுறையான கீழ்ப்படிதல் இருக்குமானால் அது ஆபத்தானது. பூமியில் பாவம் பெருகினதினால் தேவன் இவ்வுலகை அழிக்க சித்தமாகி நோவா என்ற தேவ மனிதனுடன் பேசுகிறார். தொடர் மழை பெய்ய போகிறது. அந்த அழிவிலிருந்து உன்னையும் உன் குடும்பத்தையும் காத்துக் கொள்ள ஒரு பேழையை செய் என்று சொல்கிறார். ஏன், எதற்கு என எந்த கேள்வியும் கேட்காமல் நோவா கர்த்தர் சொன்ன அளவின்படியே ஒரு இஞ்ச் கூட்டியோ குறைத்தோ கட்டாமல் அவர் சொற்படி கீழ்ப்படிந்து செய்தார். அழிவிலிருந்து அவர் குடும்பமும் காக்கப்பட்டது. அடுத்ததாக ஆபிரகாமிற்கு 100 வயதில் பிறந்த தன் பிள்ளையை மோரியா என்ற மலைக்கு கொண்டு போய் தேவன் பலியிட சொன்னார். அப்படியே கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஆபிரகாம் தன் மனைவியிடம் கூட சொல்லாமல் தன் மகனை அழைத்துச் செல்கிறான். கேள்வி கேட்காத கீழ்ப்படிதலை கண்ட ஆண்டவர் அவரை உலகம் முழுவதற்கும் ஆசீர்வாதமாக மாற்றுகிறார்.
பிரியமானவர்களே! நமது தனிப்பட்ட வாழ்வில் நாம் தேவனுக்கு கீழ்ப்படிகிறோமா? கேள்வி கேட்காமல் அவருடைய சித்தத்தை செய்ய விரும்பும் மனிதனையே தேவன் தேடிக் கொண்டிருக்கிறார். அப்படி கீழ்ப்படியும் போது அநேகருக்கு பிரயோஜனமுள்ள பாத்திரமாக மாற்ற வல்லவராக இருக்கிறார். கீழ்ப்படிதலே வாழ்வின் உயர்விற்கு மேல்படி என்பதை மறக்க வேண்டாம். ஆம், நோவா, ஆபிரகாமை போல நாமும் கேள்வி கேட்காத கீழ்ப்படிதலோடு இருப்போம். ஆசீர்வதிக்கப்படுவோம்.;
- Mrs. சசிகலா பரமசிவம்
ஜெபக்குறிப்பு
மீடியாவில் பணியாற்றும் நபர்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864