Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03.10.2023
Share:

By Village Missionary Movement

Tuesday, 03-Oct-2023

இன்றைய தியானம்(Tamil) 03.10.2023

 

மண்ணாய் கொடு

 

"நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்" - சங்கீதம் 103:14

 

ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்வும் அவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! ஆனால் ஏதாவதொரு கட்டத்தில் "இனி நான் அல்ல கிறிஸ்துவே" என நம்மை ஒப்புக்கொடுத்ததும் ஏதோ உன்னதத்திலிருந்து நம்மை தாழ்த்தியது போல் எண்ணுகிறோம். உண்மை என்னவென்றால் நாம் காலின் கீழ் மிதிபடும் மண்ணினால் உண்டாக்கப்பட்டு, தேவன் தந்த ஜீவ சுவாசத்தினால் மனிதனாகி வாழ்கிறோம். இதை உணர்ந்து தேவனிடத்தில் மண்ணைப் போல் அர்ப்பணிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். அதனால் ஆசீர்வாதங்களும், உயர்வும் உண்டு.

 

மண் எதுவும் கேள்வி கேட்காது. அதற்கென்று விருப்பு, வெறுப்பு ஒன்றையும் வைத்துக் கொள்வதில்லை. அது தன் எஜமானை மிஞ்சி மீறுவதில்லை. தன்னை உயர்த்துவதில்லை. குயவனிடம் ஒப்படைக்கப்பட்ட மண் பிசையப்பட்டு, மிதிக்கப்பட்டு, சுற்றப்பட்டு உருவாக்கப்படுகிறது. குயவன் நினைத்த உருவம் வரவில்லையென்றால் மீண்டும் பிசையப்பட தன்னை ஒப்புக் கொடுக்கிறது. அதுபோல் நாம் நம்மை தேவனிடம் ஒப்படைக்கும் போது தேவன் நம்மைக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்வார். நம் வாழ்வை அழகாக்குவார். ஆம், நம்மை தேவன் நடத்துவதில் கேள்வி, பெருமை வரும் பொழுதெல்லாம் மண் என நினைவு கூற வேண்டும். நம் எதிர்காலத்தை அறிந்தவர் நன்மைக் கேதுவாக செய்வார். ஞானம், அறிவு என்பவைகளின் பொக்கிஷமே அவர்தான். நமக்குரிய ஞானம், அறிவு குறைவுள்ளது. அவர் ஐசுவரிய சம்பன்னர், அவர் முன் நமக்குள்ளது குப்பை!

 

அறிவாய், ஞானமாய் பேசின யோபு தேவனை பார்த்ததும் நீசன் என்கிறார். ஏசாயா அசுத்த உதடுகளுள்ள மனுஷன் என்கிறார். எரேமியா சிறுபிள்ளையாய் இருக்கிறேன் என்கிறார். மோசே நான் எம்மாத்திரம் என்கிறார். இவர்கள் இவ்வாறு ஒப்படைத்ததால் தேவன் அவர்களை வல்லமையாய் பல ஆயிரங்களுக்கும் இலட்சங்களுக்கும் கோடிகளுக்கும் பயன்படுத்தினார்.

 

இதை வாசிக்கும் அன்பரே! தேவன் உங்களை நடத்தும் பாதையில் கேள்வி கேட்காமல் மண்ணாய் ஒப்புக்கொடுங்கள். அதில் வரும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொண்டு அதில் அவர் கரத்தை விடாமல் பற்றிக் கொண்டு செல்லும் போது உங்களை மண்ணென்று நினைவுகூருகிற கர்த்தர் உங்கள் மேல் உங்களை நம்பி பெரிய திட்டத்தை வைத்துள்ளார். முறுமுறுத்து, கேள்வி கேட்டு அதை இழந்து விடாதீர்கள்.

- Bro. டேவிட் கணேசன்

 

ஜெபக்குறிப்பு: 

தெபொராள் குழுக்கள் எல்லா பணித்தளங்களிலும் துரிதமாய் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al