By Village Missionary Movement
Monday, 02-Oct-2023இன்றைய தியானம்(Tamil) 02.10.2023
உப்பாக, வெளிச்சமாக
"நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்;…" - மத்தேயு 5:13
மலைப்பிரசங்கம் என்பது 111 வசனங்களை உள்ளடக்கிய மூன்று அதிகாரங்களை கொண்டதாகும். மலைப்பிரசங்கத்தின் செய்தியின் மூலம் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் அநேகர் உண்டு. இன்று நமது தேச பிதாவாகிய மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளாகும். கர்த்தராகிய இயேசுவின் மலைப்பிரசங்க செய்தியில் காந்தியடிகளும் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்தார்.
பரிசுத்த வேதாகமத்தை மிகவும் நேசிக்கவும், அதை வாசிக்கவும் காந்தியடிகள் பிரியப்பட்டார். ஆனால் காந்தியடிகள் இரட்சிப்பையும் மனந்திரும்புதலையும் விரும்பாதிருந்தார். இதனைக் கண்ட அவரது நண்பரும் இந்தியாவில் ஊழியம் செய்த மூத்த மிஷனெரியுமான னுச. ஸ்டான்லி ஜோன்ஸ் காந்தியை பார்த்து இவ்வாறாக கேட்டார். “ நீங்கள் ஏன் கிறிஸ்துவை நிராகரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
"நான் இயேசுவை நிராகரிக்கவில்லை. நான் இயேசுவை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் அவரைப் பின்பற்றும் கிறிஸ்தவர்கள் அவரின் உபதேசத்தின்படி வாழ்வதில்லையே? பின்பு நான் ஏன் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என பதிலளித்தார். மேலும் தனக்கு இங்கிலாந்திலும், தென் ஆப்பிரிக்காவிலும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை ஸ்டான்லி ஜோன்ஸ் அவர்களிடம் பகிர்ந்து கொண்டார். இயேசு நல்லவர்தான். ஆனால் அவரைப் பின்பற்றுகிறவர்கள் முரண்பாடானவர்கள் என தெளிவாக பதில் கூறினார்.
மத்தேயு ஐந்தாம் அதிகாரத்தில் 13 மற்றும் 14 ம் வசனங்களில் நாம் இவ்வாறாக வாசிக்கின்றோம். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள் என்று வாசிக்கின்றோம். உப்பாக வெளிச்சமாக சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வேண்டிய கிறிஸ்தவர்களின் தவறான நடத்தையினிமித்தம் அநேகர் இயேசுவை விட்டுவிலகுவது உண்டு. அதில் இன்றைக்கு வாசித்த காந்தியடிகளும் ஒருவராவார். இந்த செய்தியை வாசிக்கின்ற அருமையான கிறிஸ்தவ அன்பர்களே! நமது ஒவ்வொரு நடவடிக்கையும் மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் கொண்டு வருவதும் அல்லது அவர்களை கிறிஸ்துவை விட்டு வெளியேற்றுவதற்கும் காரணமாக அமையும். ஆகவே நாம் திருவசனத்தை கேட்கிறவர்களாக மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாகவும் இருப்போம். ஆண்டவர் கிருபை செய்வாராக.
- Bro. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து வழிநடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864