By Village Missionary Movement
Sunday, 17-Sep-2023இன்றைய தியானம்(Tamil) 17.09.2023 (Kids Special)
பேரழகி ஆஷா
"இகழ்வோரை அவர் இகழுகிறார்: தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்" - நீதிமொழிகள் 3:34
12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் ஆஷா. அவள் வெளித்தோற்றத்தில் அழகாக இருந்தாள்; பணக்காரியும் கூட. கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பெயரளவில்தான் கிறிஸ்தவளாக வாழ்ந்து வந்தாள். ஆஷா வளர வளர அழகும் கூடிக்கொண்டே போனது. மற்றும் தான் ஒரு பேரழகி என்ற பெருமையும் வளர்ந்து வந்தது. தன்னுடன் படிக்கும் மற்ற மாணவிகளிடம் நான் எல்லோரையும்விட அழகாயிருக்கிறேனா என்று அடிக்கடி கேட்டும் கொள்வாள். அவர்களும் இவளுக்கு ஏற்றாற்போல் பேசுவார்கள். காரணம் அவள் அடிக்கடி சாக்லேட், பேனா, பென்சில் என ஏதாவது அவர்களுக்கு கொடுத்துக் கொண்டேயிருப்பாள். இந்த ஆஷாவுக்கு கருப்பாய் இருப்பவர்களையும், ஏழைகளையும் கண்டால் பிடிக்கவே பிடிக்காது. அவர்களை கண்டால் ஏளனமாக பேசுவாள். இவளுடைய பெற்றோர்களும் இவளுக்கு எவ்வளவோ புத்திமதி சொன்னாலும் கேட்கவே மாட்டாள்.
ஒருநாள் ஆஷா வகுப்பிலுள்ள அனைவரும் அறிவியல் ஆய்வுக்கூட வகுப்பிற்கு சென்றனர். அங்கு சென்று ஆய்வு செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஆஷாவின் சோதனைக்குழாய் வெடித்து விட்டது. அந்தோ பரிதாபம்! அதிலுள்ள ஆசிட் அவளது முகத்தில் பட்டு முகமெல்லாம் ஆங்காங்கே கொப்பளித்துவிட்டது. ஆஷா அலறினாள், துடித்தாள். உடனே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மருத்துவமனையில் ஓரிரு நாட்கள் இருந்தாள். வீட்டிற்கு வந்த ஆஷா கண்ணாடியில் தனது முகத்தை பார்த்தாள். அழகியாக இருந்த ஆஷா இப்பொழுது பரிதாபமாகத் தோற்றமளித்தாள். அவளால் வேதனையை தாங்க முடியவில்லை. அடுத்து பள்ளிக்கூடத்திற்கு சென்றாள். முதல்நாள் பரிதாபப்பட்ட அவர்கள், பின் கொஞ்சம் கொஞ்சமாய் விலகிவிட்டனர். அவளை பேரழகி என்று சொன்னவர்கள் கூட அவளை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. ஆஷாவின் உள்ளம் உடைந்தது. அப்பொழுது ஆஷா, "தான் ஏளனமாக பேசிய வார்த்தைகளை கேட்ட ஏழை மாணவிகள் ஒவ்வொருநாளும் இப்படித்தானே வேதனைப்பட்டிருப்பார்கள்" என்று எண்ணினாள். தனது தவறை உணர்ந்து இயேசுவிடம் மன்னிப்பு கேட்டு ஜெபிக்க ஆரம்பித்தாள். அன்றையிலிருந்து அவளுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டு நல்ல பிள்ளையாய் வாழ ஆரம்பித்தாள்.
அன்பு தம்பி, தங்கச்சி நீயும் இந்த ஆஷாவைப் போல பெருமையுள்ளவளாக(னாக) இருக்கிறாயா? அப்படி இருந்தால் அதை இன்றைக்கே விட்டுவிட்டு, தாழ்மையான குணத்தை இயேசுவிடம் கேட்டு பெற்றுக்கொள். Ok வா, குட்டீஸ். Bye!
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864