By Village Missionary Movement
Thursday, 14-Sep-2023இன்றைய தியானம்(Tamil) 14.09.2023
கீழ்ப்படிதல்
"பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்" - நீதி. 22:6
சாதாரணமான குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் எப்படி பட்டத்து இராணியாக மாறுகிறாள் என்பதைக் காண்போம். எருசலேமிலிருந்து கைதிகளாய் பிடிக்கப்பட்டு வந்த கூட்டத்தில் பேரழகியாய் இருந்தவர்தான் எஸ்தர். இந்த எஸ்தருக்கு சொல்லக்கூடிய அளவு பின்புலம் ஒன்றும் இல்லாத நிலை. இன்னும் சொல்லக் கூடுமானால் தாய், தகப்பன் இல்லாத ஒரு அநாதையாக்கப்பட்ட நிலை. இப்படிப்பட்டதான சூழ்நிலையில்தான் மொர்தெகாய் என்ற நெருங்கிய உறவினர் அவளை தத்தெடுக்கிறார். எஸ்தரை மகாராணி பதவிக்கு ஆயத்தப்படுத்துவதில் அவர் காட்டிய தீவிரம் அவரது பொறுப்பை இன்னும் அதிகமாய் காட்டுகிறது. அரசின் பிரதானி யேகாயின் வசத்தில் அவளை ஒப்புவிக்கின்றவரை அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். பெண்களுக்குள்ள அழகு பாதுகாக்கப்பட வேண்டியது மிகப்பெரிய காரியம். உள்ளான, வெளியான அழகால் நிறையப்பட்ட எஸ்தரை தகுந்த நபரின் கையில் பிடித்துக் கொடுக்கும் வரை மொர்தெகாய் தனது பொறுப்பை மிக நேர்த்தியாய் செய்து முடித்தார்.
எஸ்தர் மொர்தெகாயினிடத்தில் வளரும் போது அவர் சொற்கேட்டு, அவருக்கு கீழ்ப்படிந்து நடந்தாள். அதுபோலவே அரண்மனையில் யேகாய் வசத்தில் இருக்கும்போதும் இவருடைய சொற்கேட்டு கீழ்ப்படிந்தே நடந்து வந்தாள். கன்னிமாடத்தில் தனக்கு வேண்டுமென்று கேட்பவைகள் எவைகளோ அவைகள் எல்லாம் கொடுக்கப்படும் என்ற சூழ்நிலையில் எஸ்தரோ யேகாய் நியமித்த காரியத்தையல்லாமல் வேறொன்றையும் கேட்கவில்லை.
இன்றைய காலங்களில் இருக்கிற வாலிப பெண்கள் உதட்டுச்சாயம், முகஅழகு, கண் மை, நகத்திற்கு பாலிஷ், உடையலங்காரம், ஆபரணம் என்று அலட்டிக் கொண்டு அலைவதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட இயல்புடைய இளம்பெண்கள் மத்தியில் தனக்கு அனுபவிக்க எல்லாம் கிடைத்த சூழ்நிலையிலும் எஸ்தர் முற்றிலும் வேறுபட்டவளாக வாழ்ந்து வந்தாள். காரணம் மொர்தெகாயின் வளர்ப்புதான்.
பிரியமானவர்களே, வேதம் நம்மை இப்படியாக எச்சரிக்கிறது. "அழகு வீண், கர்த்தருக்குப் பயப்படுகின்ற பெண்ணே புகழப்படுவாள்" என்று. இந்த வசனம் எவ்வளவு உண்மையுள்ளது. அருமையான வாலிப சகோதர, சகோதரிகளே! பெற்றோருக்கு கீழ்ப்படிந்து அர்ப்பணித்து வாழ கற்றுக்கொள்வோம். பெற்றோர்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளை சரியான வழியில் நடத்த கடமைப்பட்டுள்ளீர்கள். உலகப்போக்குக்கு எதிர்நீச்சல் போடுகிற எஸ்தர், தெபோராள், யோசுவா, தானியேல் போல தேவனுக்காக வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம்.
- Mrs. ரூபி அருண்
ஜெபக்குறிப்பு:
நம்மிடம் ஜெபக்குறிப்புகள் கொடுத்து ஜெபிக்கும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் அற்புதம் செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864