By Village Missionary Movement
Sunday, 10-Sep-2023இன்றைய தியானம்(Tamil) 10.09.2023
நன்றி கெட்ட மகன்
"உன்னைப் பெற்ற தகப்பனுக்கு செவிகொடு. உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே”. - நீதிமொழிகள் 23:22
நாகரிகமோ, படிப்போ, தொழிலோ முன்னேற்றமடையாத ஒரு சிறிய கிராமத்தில் ஜூடி, பீட்டர் தம்பதியினர் வசித்து வந்தார்கள். ஏழை விவசாயிகள். இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு அழகான ஆண்குழந்தை பிறந்தது. அவனுக்கு சாம் என்னும் பெயர் வைத்து அவனை செல்லமாக வளர்த்து வந்தார்கள். கல்வியறிவு இல்லாதஅந்த கிராமத்தில் தன்மகன் படித்து ஒரு பெரிய பட்டதாரி ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் 5 மைலுக்கு அப்பால் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் போய் சேர்த்தார்கள். அவனைக் கண்ட பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். பள்ளி படிப்பை முடித்த சாம் பெரியவனானான். அவனை கல்லூரியில் சேர்க்க வேண்டுமென்றால் 20 மைல் தூரம் இரயிலில் செல்ல வேண்டும்.
சாம்-ஐ கல்லூரியில் சேர்க்க போதுமான பணவசதி இல்லாததால், தங்களது காலை உணவை நிறுத்திவிட்டு அதற்குரிய பணத்தை சேர்த்து மகனை கல்லூரியில் சேர்த்தார்கள். சேர்த்த ஒரு மாதத்திற்கு பின்பு தன் அன்பு மகனை பார்க்க பெற்றோருக்கு ஆசை வந்தது. பிரயாண செலவிற்கு போதிய பணம் இல்லாததால் தன் பழைய ஓட்டை குதிரை வண்டியை எடுத்துக் கொண்டு பீட்டர் மட்டும் தன் மகனை பார்க்க சென்றார். போகும் வழியில் சத்திரத்தில் தங்குவதற்கு இடம் இல்லாததால் சாலை ஓரங்களில் தன் ஓட்டை குதிரை வண்டியில் படுத்துக் கொண்டு எப்படியோ கல்லூரி போய் சேர்ந்தார். அங்கு போய் பார்த்தால் வாலிப பையன்களும், பெண்களும் நாகரீகமான ஆடை அணிந்து மகிழ்ச்சியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோரும் அழுக்கு ஆடையுடன் ஓட்டை குதிரை வண்டியுடன் நின்ற இந்த பீட்டரைப் பார்த்து கிண்டல் செய்தனர். இவரோ அதைப் பொருட்படுத்தாமல் அவர்களிடம் சென்று எனது சாம்- ஐ பார்த்தீர்களா? என்று கேட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சாமும் வந்தான். இவரோ ஓடிப்போய் தன் அன்பு மகனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். ஆனால் அவனோ உதறி தள்ளி விட்டு, "கிழவா, நீ யார்?" என்று சொல்லி எல்லா மாணவர்களுக்கும் முன்பாக தன் தகப்பனை அவமானப்படுத்தினான். இதைக்கேட்ட தகப்பன் பெரும் அதிர்ச்சியடைந்தார். அவரது உள்ளம் உடைந்தது. வேதனையோடு வீட்டிற்கு வந்து தனது நாற்காலியில் தலையை சாய்த்து படுத்தார். அவ்வளவுதான், நன்றிகெட்ட மகனது கடுமையான வார்த்தைகளால் சுக்கு நூறாக உடைந்த இருதயம் அப்படியே நின்றுவிட்டது.
அருமையான தம்பி, தங்கச்சி! உனக்குக் கூட சாமை நினைத்து கோபம் வருகிறதல்லவா! நீயும் எத்தனை முறை உன் பெற்றோரின் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் அவர்களை வேதனைப்படுத்தியிருக்கிறாய் என்பதை யோசித்துப் பார்த்து உன் பெற்றோரை சந்தோஷப்படுத்து. அதுதான் உனக்கு ஆசீர்வாதம்.
- Mrs. ஜீவா விஜய்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864