By Village Missionary Movement
Wednesday, 30-Aug-2023இன்றைய தியானம்(Tamil) 30.08.2023
காக்கும் தேவன்
"...வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்" - ஏசாயா 59:19
தென் ஆப்பிரிக்க காட்டுப் பகுதியில் இன்றும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் பிள்ளைகள் காட்டில் தைரியமாக வாழ பழகிக் கொள்வதற்காக சில பயிற்சிகளைக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அடர்ந்த காட்டுப் பகுதிக்கு அந்த பிள்ளையை அழைத்துச் சென்று பெரிய மரத்திலுள்ள பொந்தில் உட்கார வைத்து விட்டு வந்து விடுவார் தகப்பன். ஒளி மங்கும் வேளையிலே காட்டு மிருகங்களின் சத்தம் கேட்டு பிள்ளை பயப்படும். சற்று நேரத்திற்கெல்லாம் விலங்குகள் அங்கு வந்து உலாவும். அவற்றில் சில அந்தப் பிள்ளையை நெருங்கும் போது, பிள்ளை வீறிட்டு அலறி அழும். அம்மிருகம் குழந்தையின் மிக அருகில் வரும் சமயம் அம்மிருகத்தின் உடலில் விஷ அம்பு பாய்ந்து கீழே விழும். யார் அக்குழந்தையைக் காப்பாற்றியது? யார் மிருகத்தைக் கொன்றது? அப்பிள்ளையின் அன்பு தகப்பனே! ஆம், அவர் அப்பிள்ளையை தனியே விடவில்லை. தொலைவில் அமர்ந்து வில் ஏந்தியவராக அவனையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். ஆபத்து நெருங்குகையில் துரிதமாய் செயல்பட்டு அவனை காப்பாற்றினார்.
ஆம், பிரியமானவர்களே! நாம் வாழும் இவ்வுலகம் தேவனால் சபிக்கப்பட்ட பூமிதான். எங்கும் துஷ்டத்தனமும், பொல்லாங்கும் நிரம்பி காணப்படுவதை காண்கிறோம். பெண்களுக்கெதிரான கொடுமைகளும், தீவிரவாதமும், கொள்ளை நோய்களும், விபத்துகளும், விபரீதங்களும் நடப்பதை காணும்போது மனுபுத்திரரின் இருதயம் நடுங்குகிறது. "எப்போது என்ன நேரிடுமோ?" என எண்ணி கலங்க வேண்டியதாயுள்ளது. இப்படிப்பட்ட உலக சூழ்நிலையிலே தேவன், தம்முடைய பிள்ளைகளுக்காக செய்வதென்ன என்று காண்போமா? அந்த காட்டிலே, தனது பிள்ளையை எந்த பொல்லாங்கும் தொடமுடியாதபடி அதன் தகப்பனார் எப்படி பாதுகாத்தாரோ, அப்படியே நம்மை இப்பொல்லாத உலகினின்று பாதுகாப்பதற்கும் நம் பரம தகப்பன் நம்மோடிருக்கிறார். அந்த உன்னதமான தேவனின் மறைவில் நாம் இருப்போமென்றால், அவர் நம்மை பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பார், வேடனுடைய கண்ணிக்கும் நாம் தப்பித்துக் கொள்வோம். பொல்லாப்பு நமக்கு நேரிடாது, எந்த வாதையும் நம் வீட்டை தொடாது. நாம் செல்லும் வழிகளில் நம்மை காக்கும்படி தூதர்களை அனுப்புவார். சிங்கம் போன்ற பயங்கர பிரச்சனைகளையும், வலுசர்ப்பமான பிசாசின் தந்திரங்களையும் நாம் மிதித்துப் போட முடியும். ஆபத்தில் அவரே நம்மோடிருந்து நம்மை தப்புவிப்பார். அல்லேலூயா !
ஆனால், நீங்கள் அவரை உங்கள் சொந்த தகப்பனாகக் கொண்டிருக்கிறீர்களா? என்பது மிக முக்கியம். தகப்பன்-பிள்ளைக்குரிய உறவும் ஐக்கியமும் உங்களிடம் உண்டா? சிந்தியுங்கள்.
- Mrs. தவமணி வைரவேல்
ஜெபக்குறிப்பு:
நம்மிடம் முழு வேதாகமம் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு நபர்களும் தேவனுக்கு பிரியமாய் வாழ ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864