By Village Missionary Movement
Sunday, 27-Aug-2023இன்றைய தியானம்(Tamil) 28.08.2023
ஐக்கியம்
"அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்;…" - 1 யோவான் 1:7
9 நபர்கள் சேர்ந்த குழு ஒன்று மலையுச்சியின் சிகரத்திற்கு சென்றுவரத் திட்டமிட்டது. அதிகப்பிரயாசத்தின் மத்தியில் வெற்றிகரமாக சிகரத்தை தொட்டுத் திரும்பினர். அவர்களைப் பார்த்த அனைவருக்கும் ஒரே ஆச்சரியம்! ஏனெனில் அந்த 9 பேரில் 4 பேருக்கு கண்கள் தெரியாது. 2 பேருக்கு பேசவும் கேட்கவும் முடியாது. 3 பேர் செயற்கைக் கால்கள் உடையவர்கள். இதுவே மக்களின் ஆச்சரியத்திற்கு காரணம். அப்படியென்றால் எப்படி இதை சாதிக்கமுடிந்தது? ஐக்கியம், கூட்டுமுயற்சி! பொதுவாகவே மற்றவர்களைக் குறித்த கரிசனை கொள்பவர்கள் வெகுசிலரே! நம்மில் அநேகர் மற்றவர்களோடு ஐக்கியம் கொள்வதிலே தயங்குகிறோம். அதற்கான காரணங்கள் பல இருப்பினும், முக்கியமான சிலவற்றை பார்ப்போம்.
முதலாவது, "மற்றவர்கள் எனக்குத் தேவையில்லை. நான் ஏன் அவர்களிடம் பேசவேண்டும். நானாகப் போய் வலியப் பேசினால் என் தகுதி என்னாவது?" என்ற பெருமையான சிந்தை நம்மை பிறரோடு ஐக்கியப்பட தடைபண்ணுவதாயிருக்கிறது. நாம் நினைக்கிறதுபோல தேவன் நம்மைப் பற்றி நினைத்தால் நம் நிலைமை என்னாவது என்று சற்று யோசிப்போம்.
இரண்டாவது, "மற்றவர்கள் உதவியெல்லாம் எனக்குத் தேவையில்லை" என்ற எண்ணம்! இதுவும் கஷ்டமே. இப்படி ஒரு கற்பனை செய்து பார்ப்போம், நாம் மட்டும் உலகில் இருக்கிறோம், நம்மிடம் வேண்டிய பணம் உள்ளது. ஆனாலும் நாம் உயிர்வாழ முடியுமா? தண்ணீர், பால், செய்தித்தாள், பெட்ரோல், உணவு போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள மற்றவர்களின் உதவி அவசியமல்லவா? ஒருவேளை, பிறர் உதவி நமக்குத் தேவையில்லை என்ற நிலையில் நாம் இருந்தாலும், நம் உதவி பிறருக்குத் தேவைப்படலாமே! மனிதர்களை உதாசீனப்படுத்துவது, படைத்த தேவனை உதாசீனப்படுத்துவது போன்றதே!
பிரியமானவர்களே! நம் வாசலில் இருக்கும் அந்நியர்களையும் நேசிப்போம், பேசுகிற வார்த்தைகளை கவனிப்போம். புன்முறுவல் செய்து மற்றவர்களோடுள்ள இடைவெளியை குறைப்போம். தேவ அன்பை பகிர்வோம், மன்னிப்போம், சகிப்போம், பொறுப்போம் . . . அநேகரை நித்திய வாழ்விற்கு அழைத்துச்செல்வோம். நீங்கள் பேச, கேட்க, அன்புகாட்ட மக்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள். அன்பு காட்ட, ஐக்கியப்பட நீங்கள் ஆயத்தமா? இன்றைய நாளின் வாய்ப்பு இன்னொரு முறை கிடைக்காமல் போகலாம். விரைவோம், வாய்ப்புகளை பயன்படுத்துவோம்.
- L. அழகர்சாமி
ஜெபக்குறிப்பு:
நம் வளாகத்தில் நடைபெறும் இராக்லாண்ட் வேதாகம கல்லூரிக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864