By Village Missionary Movement
Saturday, 26-Aug-2023இன்றைய தியானம்(Tamil) 26.08.2023
சூனேமியாள்
"தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்;…." - மத். 10:41
சூனேம் - இது அப்பெண்மணியின் பெயரல்ல. அவள் வசித்து வந்த ஊரின் பெயரே! தீர்க்கனாகிய எலிசா அவ்வூருக்கு சென்றபோது அவரைத் தன் வீட்டில் வந்து போஜனம் பண்ணும்படி வருந்திக் கேட்டுக்கொண்டாள். அப்படியே அவர் பயணப்பட்டு வரும்போதெல்லாம் அவரை அன்போடு உபசரித்து வந்தாள். அதுமாத்திரமல்ல அவர் தங்குவதற்கு ஏற்ற வசதியான ஒரு அறையைக் கட்டி, அவருக்குத் தேவையான அனைத்துக்காரியங்களையும் அங்கே செய்து கொடுத்தாள். அவளுடைய அன்பான கவனிப்பு, உபசரிப்பு, கனம்பண்ணுதல் போன்ற நற்குணம், எலிசாவை அவளுக்கு ஏதாவது நன்மை செய்ய வெண்டுமென்ற வாஞ்சையை உண்டாக்கியது. "சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவிடத்தில் உனக்காக பேச ஏதாகிலும் உண்டா?" என்று கேட்டார். ஆனால் அவளோ தனக்கு பிள்ளையில்லை என்ற ஒரு குறையிருப்பதையும் வெளிக்காட்டாமல் "என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய் குடியிருக்கிறேன்" என்றாள். ஆம், எந்த ஒரு பிரதிபலனையும் அவள் எதிர்பார்த்து அவரை உபசரிக்கவில்லை என்பதை அறிந்துகொள்ளலாம்.
கேயாசியின் மூலம் காரியத்தை அறிந்து, தீர்க்கன் அவளை ஆசீர்வதித்தபோது ஒரு குமாரனை பெற்றெடுக்கிறாள். அவன் வளர்ந்தபோது ஒருநாள் நோவுபட்டு மரித்துப்போனான். அது அவள் இருதயத்தை வெகுவாய் பாதித்தாலும் பதறாமல் தன் கணவருக்கு கூட இதை அறிவிக்காமல், தன் மகனை எலிசா தங்கும் அறையில் படுக்க வைத்துவிட்டு கர்மேலில் இருக்கும் தேவ ஊழியரிடம் போய் அவருடைய கால்களை பிடித்துக்கொண்டு தன் நிலையைக் கூறுகிறாள். அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்புகிறேன் என கூறியபோது இல்லை நீர்தான் வரவேண்டும் என்று உறுதியாய் நின்றாள். அவள் விசுவாசித்தபடி தன் மகனை திரும்ப பெற்றுக்கொண்டாள். வேதத்திலே பெயர் சொல்லப்படாத பெண்ணாய், பிரசங்கிமார்களால் அதிகமாய் பிரசங்கிப்பட்டாத ஸ்திரீயாய் இவள் காணப்பட்டாலும், உபசரிப்பதிலும், தேவபிள்ளைகளை கனம் பண்ணுவதிலும், உறுதியாக விசுவாசிப்பதிலும் இவள் நம் எல்லாருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம்.
அன்பானவர்களே! ஒருவேளை நமக்கு ஊழியம் செய்யும் வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் சூனேமியாள் போன்று நம் ஊருக்கு வருகிற தேவ ஊழியர்களை அன்புடன் நம் இல்லங்களில் ஏற்றுக்கொண்டு அவர்களை உபசரிக்கலாமே! தீர்க்கதரிசி என்னும் நாமத்தில் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு தீர்க்கதரிசிக்கேற்ற பலன் உண்டு என்று வேதம் சொல்லுகிறதை மேற்கண்ட வசனத்தில் பார்க்கிறோம். ஆம், சூனேமியாள் போல எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நன்மை செய்யும்போது, தேவன் அதற்கேற்ற பலனை நமக்கும் தருவார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
- Mrs. அனிதா அழகர்சாமி
ஜெபக்குறிப்பு:
தமிழ்நாட்டின் 310 தாலுகாக்களிலும் தெபொராள் குழுக்கள் அமைக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864