By Village Missionary Movement
Friday, 25-Aug-2023இன்றைய தியானம்(Tamil) 25.08.2023
நூற்றுக்கு அதிபதி
"…இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை . . . என்றார்" - லூக்கா 7:9
சிலர் நிகழ்த்திய அசாதாரண நிகழ்வைக் குறித்துக் கேட்டாலோ, கண்டாலோ நாம் ஆச்சரியப்படுகிறோம். ஆனால் ஒருவரின் குணத்தைக் கண்டு இயேசுகிறிஸ்துவே ஆச்சரியப்பட்டார் என்றால் அது நம்மையும் ஆச்சரியப்படுத்துகிறதல்லவா? ஆம், இயேசுகிறிஸ்துவை ஆச்சரியப்படுத்தியவர் தான் இந்த நூற்றுக்கு அதிபதி. அவருடைய பெயர் வேதத்தில் கொடுக்கப்படவில்லை என்றாலும் அவருடைய ஒவ்வொரு நற்கிரியைகளையும் வேதத்தில் எழுதப்படுவதற்கு தகுதியாய் இருந்திருக்கிறது. அவருடைய வாழ்வை நம்முடைய வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து தேவன் மெச்சுகிறவர்களாய் வாழ நாமும் பிரயாசப்படுவோமா?
* நூற்றுக்கதிபதி ஒரு படைத்தலைவனாயிருந்தாலும், தன் வேலைக்காரன் மேல் பிரியமுள்ளவராய் இருந்தார். அவர் தனது மனைவி மக்களின் சுகத்திற்காக இயேசுவை நாடியிருப்பாரானால், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் அவரோ வேலைக்காரனுக்காக ஆண்டவரை வேண்டிக்கொண்டார். நமது சிந்தை, மனநிலை, செயல் இப்படி இருக்குமா? நமது இல்லங்களில் வேலை பார்ப்பவர்களைக் குறித்த கரிசனை நமக்கு உண்டா?
* இவர் புறஜாதியாயிருந்தாலும் யூதர்களை நேசித்து அவர்களுக்கென ஒரு ஆலயத்தையும் கட்டிக்கொடுத்திருக்கிறார். இவருடைய பரந்த மனப்பான்மையை பாருங்கள்! இன உணர்வையும், ஜாதி உணர்வையும் தாண்டி பெருந்தன்மையாய் தன்னால் இயன்ற நற்செயல்களை பிறருக்காக செய்ய வேண்டுமென்ற எண்ணமுள்ளவராய் இருந்தார். நாமும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் நாம், நமது, நம் இனம் என செயல்படாமல் பரந்த மனப்பான்மையோடு காணப்படுவோம்.
* "ஆண்டவரே நீர் என் வீட்டு வாசலுக்குள் வர நான் பாத்திரன் அல்ல" என்று தன்னைத் தாழ்த்தி தன் நண்பனிடம் சொல்லி அனுப்பினார். நாம் ஜெபிக்கும்போது தேவனிடத்தில் நம்மை தாழ்த்துகிறோம்; ஆனால் நம் அன்றாட வாழ்வில் மனிதர்களுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்த மனமற்றிருக்கிறோம். அது நமக்கு கடினமாகவே இருக்கிறது.
* "ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்" என்று ஆண்டவரின் வார்த்தையின் மேல் அசைக்கமுடியாத விசுவாசம் வைத்திருந்தார். இன்று நாம் மனிதர்கள் கூறும் பொய்யான வாக்குறுதிகளை நம்புகிறோம். ஆனால் வேத வசனத்தை எந்த அளவு விசுவாசிக்கிறோம் என சிந்திப்போம்.
நூற்றுக்கதிபதியின் பெயர் வேதத்தில் இல்லாவிட்டாலும் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. நாமும் இவ்வுலகிலேயே நாம் பெயர் பெற்றவர்களாக இருக்க வேண்டுமென்று விரும்பாமல், ஜீவபுஸ்தகத்தில் இடம் பெறும் வண்ணம் சாட்சியாய் வாழ்வோம்.
- Mrs. புஷ்பா சைமன்
ஜெபக்குறிப்பு
தமிழ்நாட்டில் ஆலயம் இல்லாத ஆயிரம் கிராமங்களில் சபைகள் கட்டி எழுப்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864