By Village Missionary Movement
Tuesday, 15-Aug-2023இன்றைய தியானம்(Tamil) 16.08.2023
கண்ணீரைத் துடைப்போம்
"திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்" - சங்.102:16
இருதய வியாதியினால் இன்னும் ஒருசில மாதங்களில் மரித்துவிடும் நிலையிலிருந்த என்னை இயேசு சுகமாக்கினார். இயேசுதான் என்னை குணமாக்கினாரா என்ற சந்தேகம் எனக்கு வந்தபோது, இயேசுகிறிஸ்து உலகத்தின் ஜனங்களுக்காக அழுது பரிதபிக்கிறவராகத் தன்னை எனக்கு வெளிப்படுத்தினார். மக்களுக்காக கண்ணீர் விடுகிற இயேசுவின் கண்ணீரை துடைக்கவேண்டுமென்று எண்ணினேன். ஜனங்கள் அவரை நம்பினால் அவர் அழுகை நிறுத்தப்படும் என்பதால் அடுத்த வாரமே அருகிலுள்ள கிராமங்களுக்கு இயேசுவைக் குறித்து சொல்ல சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
முதன்முதலாக நான் ஊழியத்திற்குச் சென்றபோது வேதாகமமோ, புதிய ஏற்பாடோ, கைப்பிரதியோ என்னிடம் கிடையாது. சொல்லப்போனால் ஜனங்களுக்கு என்ன சொல்ல வேண்டுமென்று கூட தெரியாது. ஒரு கிராமத்திற்கு சென்று ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களை வெளியே அழைத்து, "ஐயா, அம்மா! உங்களுக்காக இயேசு அழுகிறார், உங்களுக்காக நீங்கள் கவலைப்படுவதைவிட இயேசு அதிகமாகக் கவலைப்படுகிறார். அவரை நம்புங்கள்" என்று கூறிக்கொண்டு வந்தேன்.
சற்று ஆட்கள் அதிகமாக இருந்த வீட்டினருகே வந்தபோது அவர்கள் என்னை அழைத்து மரிக்கும் தருவாயில் இருக்கும் ஒரு வயதான அம்மாவிடம் கூட்டிச்சென்று, "தம்பி நீ இயேசுக்காரன்தானே! இந்த பாட்டிக்கு ஓதிவிடு" என்றார்கள். நானோ முழித்துக்கொண்டு அவர்களிடம், "ஐயா எனக்கு ஓதவெல்லாம் தெரியாது" என்று சொல்லி நழுவப்பார்த்தேன். ஆனால் அருகேயுள்ளவர்களெல்லாம் கூட்டமாக வந்து,"இயேசு நல்லது செய்வார் என்றாயல்லவா, இந்த பாட்டிக்கு ஓது. ஓதாமல் இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது" என்று மிரட்டினார்கள். நான் வழியில்லாமல் கண்ணை திறந்துகொண்டே "இயேசுவே இவர்களுக்கு ஏதோ பிரச்சனை, நீங்கள் ஏதாவது செய்யுங்கள்" என்றேன். நான் சொல்லி முடித்தவுடன் அந்த தாயாரின் உடல் வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பித்தது. அவர்களை பிசாசுகள் அலைக்கழித்து வெளியேறின. அவர்கள் சாகப்போகிறார்கள் என்று நினைத்து ஓட வழி பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவர்கள் எழுந்து உட்கார்ந்து பேசினார்கள். பூரண சுகமடைந்தார்கள்.
இதை வாசிக்கும் நீங்களும் இயேசுகிறிஸ்துவின் கண்ணீரைத் துடைக்கும்படி ஏதாவது ஊழியம் செய்யுங்கள். வியாதியஸ்தர்களைக் காணும்போது, "இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினால்" அவர்களுக்காக ஜெபியுங்கள். ஆண்டவர் அற்புதங்களை செய்வார். என் ஜெபத்தைக் கேட்பாரோ கேட்கமாட்டாரோ? என்ற சந்தேகமின்றி விசுவாசத்துடன் ஜெபியுங்கள். காரணம், ஊழியம் அவருடையது. ஆகவே அவரே செயல்படுவார். அற்புதங்களைச் செய்வார்.
- Bro. K. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் நடைபெறும் மருத்துவப் பணிகள் மூலம் அநேகர் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864