By Village Missionary Movement
Thursday, 18-Mar-2021இன்றைய தியானம்(Tamil) 18-03-2021
முதல் இரத்த சாட்சி
“அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்,… நித்திரையடைந்தான்.” – அப். 7:60
ஆந்திர பிரதேசம் விகாராபாத் பகுதியில் அமைந்துள்ள யேகோவா ஷம்மா சபையை சேர்ந்த சுவிசேஷகர் சஞ்சிவலு. இவர் கிறிஸ்துவினிமித்தமாக ஒரு மர்ம கும்பலால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாகி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரத்தசாட்சியாக மரித்தார். கிறிஸ்தவ வரலாற்றை திரும்பி பார்ப்போமானால் இப்படி லட்சக்கணக்கானோர் தேவனுக்காக இரத்தசாட்சிகளாக மரித்துள்ளனர். இவர்களின் அஸ்திபாரத்தின் மேல்தான் இன்றைய சபை கட்டப்பட்டுள்ளது.
வேதாகமத்திலே கிறிஸ்துவுக்காக முதல் இரத்த சாட்சியாக மரித்தவர் ஸ்தேவான். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு சீஷர்களின் எண்ணிக்கை பெருகியது. ஆகவே தெரிந்துகொள்ளப்பட்ட ஏழுபேர்களுக்கு சபையின் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதில் பந்திவிசாரணை செய்வோரில் ஒருவராக இந்த ஸ்தேவான் நியமிக்கப்பட்டார். இவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவராய், நற்சாட்சி பெற்றவராய், ஜனங்களுக்குள்ளே பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தார். யூதர்கள் மத்தியில் வைராக்கியமாய் இயேசுகிறிஸ்துவை பற்றி பிரசங்கித்தபோது ஜனங்கள் அவருக்கு விரோதமாக எழும்பி பொய் சாட்சிகளை ஏற்படுத்தி கல்லெறிந்து கொல்ல கூடினர். கடுமையான காயங்களோடு இரத்த வெள்ளத்தின் மத்தியிலும் ஸ்தேவான் அவர்களை மன்னிக்கும்படி வேண்டுதல் செய்தார். அப்போது, இயேசுவானவர் பிதாவின் வலது பாரிசத்தில் நிற்பதை கண்டார். இறுதியில் இரத்த சாட்சியாக மரித்தார். சபையின் முதல் இரத்த சாட்சி இவரே!
இதை வாசிக்கின்ற நாம் கர்த்தருக்கென்று என்ன பணி செய்கிறோம்? அவரை எப்படி கனப்படுத்துகிறோம்? அவருக்காக எவற்றையெல்லாம் இழந்திருக்கிறோம்? ஸ்தேவான் பந்திவிசாரிப்பிற்காக நியமிக்கப்பட்டவர்தான், ஆனால் அற்புத அடையாளங்களோடு பிரசங்கித்தார். ஆவியானவர் கிரியை செய்தார். நாம் இது என் வேலையல்ல நான் ஊழியக்காரனுமல்ல என்று ஆத்தும ஆதாயம் செய்வதை ஒதுக்கி விடுகிறோமா? தம் ஜீவனை தந்து, நம் ஜீவனை மீட்ட இயேசு கிறிஸ்துவுக்காக ஏதாவது செய்யாமல் இருக்கலாமா? யாரிடமும் எப்பொழுதும் தைரியமாய் நற்செய்தியைக் கூறி நம் ஜீவனையும் கொடுத்து ஆத்தும ஆதாயம் செய்ய ஆயத்தமாயிருப்போம். ஆவியானவர் நமக்கு துணை நிற்பார். ஆமென்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
ஆந்திராவில் வெதுருவாடா கிராமத்தில் சந்திக்கப்படும் ஆத்துமாக்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் பலப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250