By Village Missionary Movement
Thursday, 27-Jul-2023இன்றைய தியானம்(Tamil) 28-07.2023
ஆத்துமா ஆதாயம்
"…ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்” - நீதி11:30
நம் நாட்டின் வட பகுதியில் ஒரு குறிப்பிட்ட மருத்துவமனை ஒன்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அதில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் ஒரு சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு 11 வயது எனவும், அவனது பெயர் ஸ்டீபன் என்றும் அவனது உறவினர்கள் கூறினார்கள். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காயம் அதிகமாய் இருந்த காரணத்தினால் அவன் உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். ஆனால் அங்கு பணியாற்றிய நர்ஸ் அவனிடம் சென்று, "தம்பி பயப்படாதே உன் கடவுள் உன்னை சுகமாக்குவார்" என்று தைரியப்படுத்தினாள். அதற்கு ஸ்டீபன் அக்கா, "நான் மரித்தால் பரலோகத்திற்கு சென்று இயேசப்பாவை பார்ப்பேன்" என்று முகம் மலர்ந்து சொன்னான்.
சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த பொழுது ஸ்டீபன் அழுது கொண்டிருந்தான். அதை கண்ட நர்ஸ் மீண்டும் ஆறுதலாக பேசினாள். அதற்கு ஸ்டீபன், "அக்கா நான் மரித்து விடுவேன் என்று அழவில்லை. நான் இதுவரை என் வயதிற்கேற்ப 10 பேரை இயேசுவிடம் வழி நடத்தி இருக்கிறேன். எனக்கு இந்த மாதத்தோடு 11 வயதாகிறது. அந்த 11 வது நபராக நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று கனிவோடு கேட்டான். சரி பார்க்கலாம் என்று சொல்லி நர்ஸ் சென்று விட்டாள். ஆனாலும் சிறுவன் கேட்ட கேள்வி அவளை சிந்திக்க வைத்தது. இதற்கிடையில் ஸ்டீபனுக்கு சிகிச்சை அளித்த புறமதத்தை சேர்ந்த மருத்துவருக்கும் ஸ்டீபன் சுவிசேஷம் சொல்லியிருந்தான். அந்த மருத்துவர் வீடு திரும்பிய போது இதை யோசித்தவராக தன் வீட்டில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். இதைப்பற்றி தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்த போது சிறுவன் இறந்து விட்டதாக தகவல் வந்தது. மருத்துவமனைக்கு வந்த மருத்துவர் கண்ட காட்சி அவர் உள்ளத்தை உருக்கியது. சிறுவன் அருகில் நர்ஸ் முழுங்கால் படியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தாள். "டாக்டர், ஸ்டீபனின் விருப்பத்தின்படி பதினோராவது ஆளாக நான் இயேசுவை ஏற்று கொண்டேன்" என்றாள் ஆனந்த கண்ணீருடன்.
மரண தருவாயிலும் 11 வயது சிறுவனுக்கு இப்படிப்பட்ட ஆத்தும பாரமும், ஆத்துமாக்களை குறித்த கரிசனையும் இருக்குமானால் நம்மைக் குறித்து என்ன? இஸ்ரவேல் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே பவுலின் இருதயத்தின் விருப்பமாயிருந்தது. நம்முடைய விருப்பம் என்ன? இன்றைய வேதபகுதியில் சொல்லப்பட்ட அனைத்து பாடுகளிலும் சபையை குறித்து உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது என்று கூறுகிறார் பவுல். நமக்கும் சபை மக்களை குறித்த ஊழிய வாஞ்சை பெருகட்டும். ஆத்தும ஆதாயம் செய்ய நம்மை அர்ப்பணிப்போம். நம் தேசத்தில் பெரிய எழுப்புதலை காண்போம்.
- Mr.பாக்கிய நாதன்
ஜெபக்குறிப்பு:
நமது ஊழியர்களின் பிரயாணங்களில் தேவன் பாதுகாப்பை கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864