By Village Missionary Movement
Saturday, 22-Jul-2023கேளுங்கள் தரப்படும்
"...கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்" - லூக்கா11:9
தேவன் நமக்கு எவ்வளவு அருமையான உறுதியான வாக்குத்தத்தத்தை கொடுத்திருக்கிறார் என்று பாருங்கள். அதுவும் மூன்று விதமான உறுதியுடன் நாம் தேவனிடம் எப்படி கேட்க வேண்டும் என்பதை தெளிவாக எழுதி வைத்திருக்கிறார். சர்வ லோகத்தையும் படைத்த தேவன்தான் இந்த வாக்கை நமக்கு கொடுத்திருக்கிறார். அவர் வாக்கு மாறாதவர். மனிதர்கள் நமக்கு கொடுத்த வாக்கை மறந்து போகலாம். ஆனால் நம் இயேசு கிறிஸ்து என்றும் வாக்கு மாறாதவராயிருக்கிறார்.
முதலாவது: கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். நாம் சிறு குழந்தையாயிருக்கும் போது நம் தாய் நாம் கேட்காமலேயே சரியான நேரத்தில் உணவு ஊட்டி விடுவார்கள். அதுபோல் ஆண்டவரும் நாம் கேட்காமலேயே பல ஆசீர்வாதங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் வளர்ந்த பின்பு நாம் கேட்கும் போதுதான் ஆகாரம் கொடுப்பாள் தாய், அதுபோலத்தான் நம்முடைய சில தேவைகளைக் குறித்து நாம் ஆண்டவரிடம் கேட்க வேண்டும் என்று ஆண்டவர் எதிர்பார்க்கிறார்.
இரண்டாவதாக: தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள். ஒருமுறை ஒரு புதிய கம்மல் அணிந்து ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன். எப்படியோ ஒரு கம்மல் கழண்டு பஸ்ஸிலேயே விழுந்துவிட்டது. இறங்குவதற்கு முன் காதில் கம்மல் இல்லை என்பதை அறிந்து உடனே தேடினேன். நல்லவேளையாக பஸ்ஸிற்குள்ளேயே கிடைத்து விட்டது. அதை திரும்ப கண்டெடுத்தபோது என் உள்ளம் மகிழ்ச்சியினால் நிறைந்தது. தொலைத்த இடத்தை விட்டு, பஸ்ஸிற்கு வெளியே தேடியிருந்தால் கிடைக்காது. அதுபோல தாமதமின்றி உரிய நேரம், உரிய இடத்தில் தேடும் போது இழந்த மகிழ்ச்சியை, தேவபிரசன்னத்தை பெற்றுக் கொள்ளுவோம்.
மூன்றாவதாக: தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். என் மகளின் கல்லூரி படிப்பிற்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டபோது, ஆண்டவரை மட்டும் சார்ந்து அவருடைய கதவைத் தட்டி காத்திருந்தேன். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் கிடைத்து தேவையை சந்தித்தார். வேதத்திலும் யோசேப்பு ஆண்டவரையே நம்பியிருந்தாலும், தன்னை சிறையிலிருந்து விடுவிக்க பானபாத்திரகாரரின் தலைவன் உதவி செய்வான் என காத்திருந்தான். ஆனால் பானப்பாத்திரக்காரன் யோசேப்பை மறந்து விட்டான். தேவனோ ஏற்ற காலத்தில் யோசேப்பை மீட்டு எகிப்தின் அதிபதியாக உயர்த்தினார். ஆகவே மனிதர்களை நம்பாமல் ஆண்டவரையே நோக்கிப் பார்ப்போம். ஏனெனில் தட்டுகிறவனுக்கு தேவனுடைய வாசல் எப்பொழுதும் திறக்கப்படும் என்று விசுவாசித்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்வோமாக! ஆமென்!
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு
தோழமை ஊழியர்களின் பணித்தள ஊழியங்களில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864