By Village Missionary Movement
Tuesday, 11-Jul-2023இன்றைய தியானம்(Tamil) 11-07.2023
நாளை பார்த்துகொள்ளலாம்
"…இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்ளுவோம்” - எபிரெயர் 2:4
கிரீஸ் நாட்டை ஆண்ட மன்னர்களுள் அர்கியஸ் என்ற மன்னரும் ஒருவர். இவர் தனது நாட்டு மக்களின் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாதவராக இருந்தார். எல்லாவிதமான சிற்றின்பங்கள் அனுபவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் நாட்டில் எந்த விதமான வளர்ச்சியும் இல்லை. மன்னரின் பொறுப்பற்ற ஆட்சியின் விளைவாக சீர்கேடுகளால் நிறைந்திருந்தது. இதனால் அந்நாட்டு மக்கள் பொறுமையிழந்தவர்களாக மன்னனை அழிக்க சதித்திட்டம் தீட்டினர். சதித் திட்டத்தை நிறைவேற்ற தகுந்த சமயத்தை மக்கள் தேடி கொண்டிருந்தனர். மக்கள் தனக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர், தன்னை கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டுகின்றனர் என்பதையும்கூட அறியாதவராய் இன்னும் அதிகமாய் இன்பமான கேளிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். இவரது நெருங்கிய நண்பர் ஒருவர் மூலமாக கடிதத்தின் வாயிலாக மன்னரின் கொலை குறித்த சதி திட்டம் வருகிறது. அந்நிலையிலும் கூட மன்னர் கடிதத்தை பிரித்து வாசிக்க இயலாதவராய் அதனை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியம் செய்தார். இந்நிலையில் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் மன்னர் மீது பாய்ந்து மன்னரை கொன்று போட்டனர். மன்னரின் மரணத்துக்கு அவரது நாளைக்கு பார்த்து கொள்ளலாம் என்ற அலட்சியம் (எண்ணம்) காரணமாயிருந்தது.
பழைய ஏற்பாடு காலத்தில் ஈசாக்கு என்ற தேவ மனிதருக்கு இரண்டு பிள்ளைகள். ஏசா, யாக்கோபு இதில் மூத்தவனாகிய ஏசாவுக்கு சேஷ்ட புத்திர பாகம் சென்றது. ஆனால் அவனோ ஒருநேர கூழுக்காக அதை அலட்சியப்படுத்தினான். மேலும் இயேசு கிறிஸ்து மத்தேயு 25ம் அதிகாரத்தில் கூறின உவமையிலே ஒரு தாலந்தை பெற்றவன் அதன் முக்கியத்துவத்தை உணராமல் அதை அலட்சியப்படுத்தினான். முடிவு நரகம் என்று பார்க்கிறோம்.
பிரியமானவர்களே, பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். (எசேக். 18:14) பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6:23) இப்படி எல்லாம் வேதம் நம்மை எச்சரிக்கிறது. தேவன் நமக்கு கிருபையாய் கொடுக்கின்ற ஒவ்வொரு நாளையும், கிடைக்கின்ற வாய்ப்புகளையும் அவ்வப்பொழுது பயன்படுத்திக் கொள்ளுவோம். நாளைக்கு பார்த்துக் கொள்ளுவோம். பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என அதனை தள்ளிப் போடாமல் அலட்சியம் செய்யாமல் உடனடியாக செய்து முடிப்போம். தேவன் நமக்கு கிருபையாய் கொடுக்கிற பெலத்தோடே வாழ்வோம்!
ஜெபக்குறிப்பு:
ஆகஸ்டு 15ல் திருநெல்வேலியில் நடைபெறும் வாலிபர் முகாமின் ஆயத்தப்பணிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864