By Village Missionary Movement
Friday, 30-Jun-2023இன்றைய தியானம்(Tamil) 01-07.2023
சுவிசேஷ வேலை
"அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்து விடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான்" – லூக்கா 14:33
லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு நாளிதழில் ஒரு விளம்பரம் இவ்விதமாக வந்திருந்தது. மிகவும் ஆபத்து நிறைந்த இருளான பகுதியில் பணிபுரிய ஆட்கள் தேவை. வெற்றி பெறும் ஒவ்வொருவருக்கும் தகுந்த பரிசும் உயர்வும் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை கொடுத்திருந்தவர் ஆர்டிக் பகுதியின் ஆராய்ச்சியாளர் சர். கார்னல் ஷேக்கிள்ஸ்டன் என்பவர். இந்த விளம்பரத்தைப் பார்த்து ஆயிரக்கணக்கான வாலிபர்கள் அதைக் குறித்து விசாரித்து, ஆர்டிக் பகுதிக்கு வர விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்த விளம்பரத்தையும் இதற்கு விருப்பம் தெரிவித்த வாலிபர்களையும் மேற்கோள்காட்டி லாரன்ஸ் “Faithful” என்ற தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார், "கடினமான இடங்களில் ஊழியம் செய்து தேவனுடைய ராஜ்யத்தை கட்டி எழுப்ப ஆட்கள் தேவை என்றும், நீங்கள் செய்யும் வேலையில் உடனடியாக பலனை எதிர்பார்க்க முடியாது என்றும், நீங்கள் அனேக தியாகங்களை செய்ய நேரிடும் என்றும், ஒரு வேளை உங்கள் ஜீவனை கூட இழக்க நேரிடலாம் என்றும் இயேசுகிறிஸ்து ஒரு விளம்பரம் கொடுத்திருந்தால் அதற்கு எத்தனைபேர் முன்வருவார்கள்?" என்று!
“யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்” என்கிற தேவனுடைய சத்தம் இன்று அனேகர் காதுகளில் பலமாய் தொனித்தாலும் ஒன்றுமே கேளாதவர்கள் போல அமைதியாக இருந்து விடுகிறோம். ஆண்டவர் தமது தோட்டத்தில் வேலை செய்ய அனேக வேலையாட்களை அவர் தேடி வருகின்றார். தினமும் “ஒரு மணி நேரம் மட்டும் வேலை செய்தாலும் போதும்” என்கின்ற அளவில் ஆட்களை ஆண்டவர் தேடுகின்றார். முழு நேரமாகவோ அல்லது இயன்ற அளவிலோ ஏதாவது ஒரு பகுதியில் ஆண்டவருடைய வேலையை செய்ய நம்மிடம் எதிர்பார்க்கின்றார். சுவிசேஷப்பணி செய்யும் விஷயத்தில் நாம் தாமதம் செய்யக்கூடாது.
இது கடைசிக்காலம் என அநேக பிரசங்கங்களில் கேட்டிருக்கின்றோம். இந்த நாட்களில் இயேசுவுக்காக நாம் எதைச் செய்கின்றோமோ அதுவே நித்தியத்தில் நமக்கு பலனாக இருக்கும். உலகத்தையும் உலகப் பிரகாரமான வேலைகளுக்காகவும் தீவிரித்து ஓடும் நமது கால்கள் சுவிசேஷப் பணிக்காக கொஞ்சமாவது வேலை செய்யுமா? கடைசி நாட்களில் நிற்கும் நாம்
ஆண்டவருடைய வேலையை செய்ய சற்று அதிகமாக முயற்சி எடுப்போம்.
- Bro. ஜேக்கப் சங்கர்.
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து வழிநடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864